சினிமா செய்திகள் நடிகர்

விடாமல் தொடரும் சிக்கல் விரக்தியில் தனுஷ்

மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன், இவரது மனைவி மீனாட்சி. இவர்கள் நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என உரிமை கோரி வருகின்றனர். இவர்கள் நடிகர் தனுஷிடம் மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்பு செலவு கோரி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையேற்று மேலூர் நீதிமன்றத்தில் கதிரேசன் தம்பதி தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் போலி பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், ரேஷன் கார்டு நகல்கள் தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியதாகவும், இதனால் தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கதிரேசன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மார்ச் 23-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி கதிரேசன் உயர் நீதிமன்ற கிளையில் நேற்று மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:

நடிகர் தனுஷூக்கு எதிராக நானும், எனது மனைவியும் மேலூர் நீதிமன்றத்தில் பராமரிப்பு செலவு கோரி மனு தாக்கல் செய்தோம். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தனுஷ் தனக்கு சாதகமாகப் பல்வேறு போலி ஆவணங்களை தாக்கல் செய்தார். இதை நம்பி பராமரிப்பு வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததற்காக தனுஷ் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி கோ.புதூர் காவல் ஆய்வாளரிடம் 5.10.2017-ல் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை தனுஷ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யவி்ல்லை.

பின்னர் மதுரை மாநகர் காவல் ஆணையரை 23.10.2017-ல் நேரில் சந்தித்து எனது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ய கோ.புதூர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிடக்கோரி மனு அளித்தோம். அதன் பிறகும் வழக்கு பதிவு செய்யவில்லை.

தனுஷ் போலி ஆவணங்களை உருவாக்கியது சட்டப்படி குற்றமாகும். எனவே எனது புகாரின் பேரில் நடிகர் தனுஷ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்தச் சிக்கல் வருடக்கணக்கில் இழுத்துக்கொண்டே இருப்பதால் தனுஷ் விரக்தியடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

Related Posts