சினிமா செய்திகள்

மூன்று சூப்பர்ஸ்டார்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் – பிறந்த நாள் சிறப்பு

2001 ஆம் ஆண்டு வெளியானது அஜீத் நடித்த தீனா படம்.அதன் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்,

முதல்படமே வெற்றி என்பதால் அவருக்கு நிறைய மதிப்பு மட்டுமின்றி எல்லாக் கதாநாயகர்களுமே அவருடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்தனர்.

முருகதாஸின்  இரண்டாவது பட நாயகன் விஜயகாந்த். இருவரும் இணைந்த ரமணா படம், மருத்துவத்துறையின் அநியாயங்கள் பற்றிச் செய்திகள் வரும்போதெல்லாம் பேசப்படும் படமாக இருக்கிறது.

மூன்றாவது படத்தில் சூர்யாவுடன் இணைந்து கஜினி படம் கொடுத்தவர் நான்காவது படத்தில் தெலுங்கின் உச்சநட்சத்திரம் சிரஞ்சீவியை  இயக்கினார்.

அதற்கடுத்தது இந்தியின் உச்சநட்சத்திரம் அமீர்கானை வைத்து இந்தியில் கஜினி படத்தை எடுத்தார். அப்படம் மிகப்பெரிய வசூல்சாதனை படைத்தது. 

அதன்மூலம் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் இயக்குநரானார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அடுத்தடுத்து விஜய்,சூர்யா,அக்‌ஷய்குமார்,மகேஷ்பாபு உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் பணியாற்றினார்.
 
இப்போது ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்.

18 ஆண்டுகளில் 12 படங்கள் மட்டுமே இயக்கிவிட்டு தற்போது 13 ஆவது படத்தை இயக்கும் அவர், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் உச்சநட்சத்திரங்களை வைத்துப் படம் இயக்கிய பெருமை பெற்றவர். 

அவருக்கு இன்று 46 ஆவது பிறந்தநாள்.

தமிழகத்தின் சிறு நகரமொன்றில் பிறந்து இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநராகத் திகழும் அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

– அ.தமிழன்பன்   

Related Posts