சூரரைப் போற்று பட சர்ச்சைக்குக் காரணம் இதுதான்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று.
இந்தப்படத்தின் பணிகள் பெருமளவில் முடிவடைந்து தணிக்கையும் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்று அவ்வப்போது செய்திகள் வருகின்றன.
ஏற்கெனவே, பொன்மகள்வந்தாள் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட்டதால் திரையரங்குக்காரர்களின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கும் சூர்யா, இப்போது அவர் நடித்த படத்தையும் இணையத்தில் வெளியிடுவாரா? என்கிற கேள்வியும் எழுகிறது.
இந்த விசயத்தில் என்னதான் நடக்கிறது?
சூர்யாவின் விருப்பு வெறுப்பைத் தாண்டி, இணைய நிறுவனத்தினர், வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் ஒரு பெரிய படத்தை வாங்கி வெளியிடவேண்டும் என்பதற்காக சூரரைப்போற்று படத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
அதற்காக சுமார் ஐம்பது கோடி வரை கொடுக்கவும் அவர்கள் தயாராகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தொகை சம்பந்தமான கருத்து வேறுபாடுகள் இருப்பதால் அந்தப் பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறதெனச் சொல்லுகிறார்கள்.
படக்குழு எதிர்பார்க்கிற தொகையை இணைய நிறுவனம் கொடுத்தால் நேரடியாக இணையத்தில் படம் வெளியாகலாம் என்று சொல்கிறார்கள்.
அப்படி இல்லாவிட்டால்? திரையரங்குகளுக்கே முன்னுரிமை என்று சொல்லிவிடுவார்கள்.











