சினிமா செய்திகள்

அமேஸானை நம்பி ஏமாறாதீர்கள் – சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு இயக்குநர் வேண்டுகோள்

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்மகள்வந்தாள் படத்தைத் திரையரங்குகளுக்குக் கொண்டுவராமல் நேரடியாக இணையதளத்தில் வெளீயிட முடிவு செய்திருப்பதால் தமிழ்த் திரையுலகில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

திரையரங்குகள் கிடைக்காத சிறு முதலீட்டுப் படங்களுக்கு இது வரப்பிரசாதம் என்று இதை ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள். 

இந்நிலையில், கோகோமாக்கோ,இந்தநிலைமாறும் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் அருண்காந்த் இதுபற்றிக் கூறியிருப்பதாவது….  

அமேஸான் போன்ற இணையதளங்களுக்கு  படத்தைக் கொடுப்பவர்கள், அவுட்ரேட் முறையில் படத்தைக் கொடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.(அவுட்ரேட் முறையில் அவர்கள் எந்தப் படங்களை வாங்குவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்)

ஆனால் ரெவன்யூ ஷேர் எனும் பார்க்கப்பார்க்கப் பணம் என்கிற ஆசைக்கு இரையாகிவிடாதீர்கள்.
ஏனெனில், அமேஸான் போன்ற தளங்களில் ஒரு மணிநேரம் ஒரு படத்தைப் பார்த்தால் அதன்மூலம் தயாரிப்பாளருக்குக் கிடைக்கும் தொகை ரூபாய் 2.80 காசுகளிலிருந்து மூன்று வரைதான். 

இதுவும் விரைவில் குறையும் என்கிறார்கள். அதுமட்டுமின்றி ரெவன்யூஷேரில் படத்தைக் கொடுத்தால் அதுகுறித்து ஒரு ட்வீட் கூட அமேஸான் நிறுவனம் போடாது. நீங்கள் செலவு செய்து விளம்பரம் செய்தால்தான் உங்கள் படம் அந்தத் தளத்திலிருப்பது தெரியும்.

அதுவும் கடைசியாகச் சேர்த்த படம் முதலில் இருக்கும் ஒழுங்குமுறை அங்கே கிடையாது, அதிகம் பார்க்கப்படுகிற படங்கள் மேலே இருக்கும், புதிய படங்களைத் தேடிப்பிடிக்க வேண்டும். 

இதை முறைப்படுத்த பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அமேஸான் அதை ஏற்கவில்லை.

எனவே ரெவன்யூ ஷேர் முறையில் படத்தைக் கொடுப்பது உங்களுக்கு எந்தப்பலனையும் தராது,என் அனுபவத்திலிருந்து இதைச் சொல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts