சினிமா செய்திகள்

சூர்யாவுக்குப் பெயர் வைத்த மணிரத்னம் – மலரும் நினைவுகள்

இயக்குநர்கள் வசந்த்,மணிரத்னம், சரண் ஆகியோரிடம் பணியாற்றிவிட்டு அன்பே அன்பே படத்தின் மூலம் இயக்குநரானவர் மணிபாரதி. அவர் தற்போது பேட்டரி என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அவர் தன்னுடைய நினைவலைகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

அதிலிருந்து….

நேருக்கு நேர் படத்தில் சூர்யா தேர்வான சம்பவம்.
அஜித் நடிப்பதில்லை என முடிவான பிறகு, அந்த கேரக்டரில் யாரை போடலாம் என, யார் யாரையோ யோசித்து பார்த்தோம்.. யாரும் செட் ஆக வில்லை. அப்போதுதான், சுகாசினி மேடம் வஸந்த் சாரிடம் ‘ சிவக்குமார் சாருக்கு ஒரு பையன் இருக்கான். அவனை வேணும்ன்னா கேட்டுப் பாருங்க..’ என்றார்.

வஸந்த் சாருடன் நானும் சிவக்குமார் சார் வீட்டிற்கு சென்றிருந்தேன்.
அப்போது சரவணன் என்கிற சூர்யா அம்பத்தூரில் உள்ள ஒரு கார்மெண்ட்ஸ் ஃபேக்டரியில் மாதம் 7500 ரூபாய் சம்பளத்திற்கு சூப்பர்வைஸராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

சிவக்குமார் சாரை சந்தித்து விஷயத்தை சொன்னதும், அவர் சொன்ன வார்த்தை ‘வஸந்த், அவன் வாழ்க்கைய கெடுத்துடாதிங்க.. அவனுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல சொந்தமா ஒரு யூனிட் போட்டு தரப்போறேன்’ என்றார்.

நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பினோம். அதன் பிறகு, மணிரத்னம் சார் போன் பண்ணி சிவக்குமார் சாரிடம் பேசி ஒப்புக்கொள்ள வைத்தார். ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு தேதி முடிவானது.

சரியான நேரத்தில் வர வேண்டும் என்பதற்காக, சிவக்குமார் சார், முதல் நாளே ஆபிஸிற்கு வந்து, இடத்தை பார்த்து விட்டு சென்றார்.

அடுத்த நாள் சரவணன் என்கிற சூர்யா ஸ்கிரீன் டெஸ்ட்டிற்கு சரியான நேரத்திற்கு வந்தார். ரொம்பவும் பயந்த சுபாவத்துடன் காணப்பட்டார். நடிப்பும் எதிர்பார்த்தபடி இல்லை. அதன் பிறகு ஒரு மாதம் சூட்டிங்கை தள்ளி வைத்து விட்டு, அவருக்கு நடிப்பு சொல்லி கொடுக்கும் வேலையை என்னிடமும், மாரிமுத்துவிடமும்(இப்போது இவர் நடிகர்) வஸந்த் சார் ஒப்படைத்தார்.

எனக்கும் மாரிமுத்துவிற்கும் தினமும் சிவக்குமார் சார் வீட்டில்தான் டூட்டி. அதன் பிறகு சரவணன் என்கிற சூர்யா நன்றக தேறி வந்தார். சூட்டிங்கும் ஆரம்பித்தது. சரவணன் என்கிற பெயரை சூர்யா என மணிரத்னம் சார்தான் மாற்றி வைத்தார். இப்போது சூர்யா நடிப்பில் எப்படி பட்டையை கிளப்புகிறார் என்பது உலகத்திற்கே தெரிந்த விஷயம்.

சிவக்குமார் சாரின் ஒரிஜினல் பெயர் பழனிசாமி. அதை ஏவிஎம் சரவணன் சார்தான் சிவக்குமார் என மாற்றி வைத்தார். சிவக்குமார் சாருக்கு முதல் பையன் பிறந்த போது அவர் ஏவிஎம் சரவணன் சாரை சந்தித்து ‘ எனக்கு சிவக்குமார்ன்னு நீங்க பெயர் வச்சிங்க. என் பையனுக்கு சரவணன்னு உங்க பெயரை நான் வைக்கிறேன்’ என்று சொல்லி வைத்தாராம்.

அதுவும் சூர்யா என மாறி இன்று சினிமாவில் ஒளி வெள்ளத்தை பாய்த்துக் கொண்டிருக்கிறது. வாழ்க சூர்யா.

Related Posts