செய்திக் குறிப்புகள்

டி.ராஜேந்தர் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து நடந்த சந்திப்பு – தீர்வு வருமா?

விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10 விழுக்காடு
டிடிஎஸ் (TDS) வரியை முற்றிலுமாக இரத்து செய்யவேண்டும் இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவேடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் டிடிஎஸ் வரியை நீக்கும் வரை நடைமுறையில் இருக்கும் என்று மார்ச் 10 ஆம் தேதியன்று டி.ராஜேந்தர் அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 16) தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பிரதிநிதிகளான எங்களைச் சந்தித்து, நாங்கள் அளித்த தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வருமான வரி பிடித்தத்தில் (TDS) நடப்பில் உள்ள பகிர்மான விகிதாச்சாரம் தொடர்பான குறைகளை எடுத்துரைக்கும் நினைவுப் பத்திரத்தை பெற்றுக் கொண்டதோடு, இது குறித்த எங்களது கருத்துகள், எண்ணங்களையும் கேட்டு தெரிந்துக் கொண்ட, மாண்புமிகு இந்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு முதற்கண் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போதுள்ள நடைமுறையில் சில முக்கிய குறைகள் இருப்பதைப் புரிந்துக் கொண்ட நிதி அமைச்சர், உடனடியாக அதனைத் தீர்க்கும் விதமாக, திரைப்படத்துறையினரையும் உள்ளடக்கிய ஒரு சிறப்பு குழு அமைத்திட உத்தரவிட்டார்.

திருமிகு. சுமலதா எம். பி, திருமிகு. பிரஹலாத் ஜோஷி, பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர், திருமிகு. கே.ரகுராம கிருஷ்ண ராஜூ எம். பி., திரு. காட்ரகட்ட பிரசாத், திரு. ரவி கொட்டாரக்கரா, திரு. சி. கல்யாண், திரு. டி ஆர். ஜெயராஜ், திரு. சா. ரா. கோவிந்து, திரு. ராக்லைன் வெங்கடேஷ், திரு. கே சி என் சந்திரசேகர், திரு. கே எல் தாமோதர் பிரசாத் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட இக்குழு, குறைகளைக் களைய தேவையான விஷயங்களை விவாதித்து, தீர்வை எட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

சந்திக்க வாய்ப்பு வழங்கி, எங்களது குறைகளைக் கேட்டும், அதனை தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தும் உதவிய, மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுக்கு ஒட்டுமொத்த திரைத்துறையினர் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக காட்ரகட்ட பிரசாத் (தலைவர்), ரவி கொட்டாரக்கரா (செயலாளர்)

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts