Uncategorized

எல்லா இடங்களிலும் உங்க பாட்டுதான் – மு.க.ஸ்டாலின் பாராட்டு கபிலன் மகிழ்ச்சி

கவிஞர் கபிலன் தன்னுடைய பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

அவரைச் சந்திப்பது அவ்வப்போது நடக்கிற நிகழ்வுதான் என்றாலும் நேற்றைய சந்திப்பு சிறப்பானதாய் அமைந்திருந்திருக்கிறது.

அதற்குக் காரணம், அண்மையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற உன்ன நெனச்சு நெனச்சு பாடல்தான்.

இளையராஜா இசையில் மிஷ்கின் இயக்கும் சைக்கோ படத்தில் இடம்பெற்ற அந்தப்பாடல் எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அந்தப்படத்தின் நாயகன் உதயநிதி. அதனால் அந்தப்பாடலை உடனே கேட்கும் வாய்ப்பு மு.க.ஸ்டாலினுக்கு அமைந்திருக்கிறது. கேட்டவுடன் மிகவும் பிடித்துவிட்டதாம்.

கபிலனைப் பார்த்ததும் பாடல் குறித்து நிறையப் பேசியிருக்கிறார். எல்லோரும் இந்தப் பாட்டைப் பத்தி பேசுறாங்க என்று சொல்லியிருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் போன்ற அரசியல் பரபரப்புகளுக்கிடையே, கபிலனைச் சந்தித்தும் திரைப்படப்பாடல் குறித்தும் விரிவாகப் பேசியது கவிஞரை நெகிழ வைத்திருக்கிறது.

டிகேஎஸ்.இளங்கோவன், டி.ஆர்.பாலு ஆகியோரோடு பேசிக்கொண்டிருந்த நேரத்தில் நான் போனேன். மரியாதை நிமித்தம் பார்க்கப்போன என்னைப் பார்த்ததும் அந்தப்பாடல் குறித்து மகிழ்ச்சியாகப் பேசத்தொடங்கினார்.

இருபது நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம், அவருக்கு நிறைய வேலைகள் இருக்கும் என்பதால் உடனே கிளம்புகிறேன் என்று புறப்பட்டேன்.

இருங்கள் போகலாம் என்றவர், எனக்கு காபி கொடுக்கச் சொன்னதோடு நினைவில் நிறைந்து வாழும் கலைஞர் மலரை எடுத்து வரச் சொல்லி எனக்குக் கொடுத்தார்.

என் பாடலைப் பற்றி அவ்வளவு சிலாகித்து அவர் பேசியதே எனக்குப் பெரிய சந்தோசம், அதோடு கூடுதல் மகிழ்ச்சியாக கலைஞர் மலரும் கிடைத்தது என்கிறார் கபிலன்.

படைப்பாளிக்கு மகிழ்ச்சி என்பது அவருடைய படைப்பு கொண்டாடப்படுவதுதான். மாபெரும் அரசியல்கட்சியின் தலைவரிடமிருந்து பாராட்டுப் பெற்ற கபிலன், அந்த நேரம் நெகிழ்ச்சித் தருணமாக அமைந்திருந்தது என்கிறார்.

Related Posts