வி 1 – திரைப்பட விமர்சனம்
எதிர்பாரா வகையில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையைச் செய்தது யார்? என்கிற விசாரணையும் அதன் இறுதியில் கிடைக்கும் அதிர்ச்சி தரும் விடையும்தான் இந்தப்படம்.
காதலாகிக் கசிந்துருகி இணைந்து வாழ்கின்றனர் லிஜேஷும், காயத்ரியும்.
காதல் என்றால் கூடவே மோதலும் இருக்கும்தானே. அப்படியான சந்தர்ப்பத்தில் ஓர் இரவில் காயத்ரி கொலை செய்யப்படுகிறார்.
அந்தக் கொலையைச் செய்தது யார் என்ற விசாரணையைத் தொடங்குகிறார் நாயகன் ராம் அருண் காஸ்ட்ரோ.
காவல்துறை அதிகாரி என்று மட்டும் சொல்லாமல் தடயவியல் நிபுணராகவும் அவருடைய பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. திரைக்கதை ஓட்டத்துக்கு வலுச்சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.
முதல்படம் போலவே தெரியாமல் நாயகன் ராம் அருண் காஸ்ட்ரோவின் நடிப்பு இருக்கிறது. விசாரணை அதிகாரி என்பதோடு இருள் பயம் கொண்ட பாத்திரம் அவருடைய நடிப்பை வெளிப்படுத்த உதவியிருக்கிறது.
அவருடன் இணைந்து விசாரணை அதிகாரியாக வரும் விஷ்ணுப்ரியா பிள்ளையும் பொருத்தமாக இருக்கிறார். ஆண்களாகவே வந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவர் இருப்பு ஆறுதல்.
லிஜேஷ், காயத்ரி, லிங்கா ஆகியோர் தங்கள் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
ரோனி ரெபேலின் இசையும், கிருஷ்ணசங்கர் டி.எஸ்-ன் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்றவகையில் இருக்கிறது. படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம்குமார் படம் வேகமாகச் செல்ல உதவியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் பாவல் நவகீதன். எங்க அடி வயத்துல ஏண்டா சாதியை வைக்கிறீங்க என்கிற கேள்வி சாதிவெறியர்களின் செவிட்டில் அறைகிறது.
க்ரைம் கதையாகவே முடித்திருந்தாலும் சரியாக இருந்திருக்கும் கதையில் முக்கியமான சமுதாயச் சிக்கலைப் பொருத்தமான இடத்தில் கலந்திருப்பதில் இயக்குநரின் சமுதாய அக்கறை வெளிப்படுகிறது.










