சன் டிவியில் தர்பார் இசைவிழா ஒளிபரப்பு – புதிய சர்ச்சை
ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தர்பார்.
இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
2020 பொங்கலையொட்டி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா டிசம்பர் 7 ஆம் தேதியன்று நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.
அந்நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் நேற்று ( டிசம்பர் 22) மதியம் ஒளிபரப்பானது.
டிசம்பர் 7 அன்று நடந்த நிகழ்வில், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் பற்றிய ஒரு காணொலி தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது.
அவர் செய்த நற்செயல்கள், இனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு வீடு உள்ளிட்டு அவர் செய்த உதவிகள் ஆகியனவற்றைத் தொகுத்து அந்தக் காணொலி அமைந்திருந்தது.
நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்தக் காணொலி, நேற்றைய சன் தொலைக்காட்சி ஒளிபரப்பில் காணவில்லை.
பெரும்பொருட் செலவில் படத்தைத் தயாரித்தவர் சுபாஸ்கரன். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை சன் தொலைக்காட்சிக்குக் கொடுத்தவரும் அவர்தான்.
ஆனால் அவர் குறித்த காணொலியை ஒளிபரப்பாமல் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பாமல் விட்டது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
இதனால் சன் நிறுவனத்தின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாரம் சுபாஸ்கரன்.











