சினிமா செய்திகள்

தணிக்கை சிக்கலைக் கடந்த சைக்கோ – அவ்வளவு பிடிவாதம் ஏன்?

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சைக்கோ’. இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அதிதிராவ் மற்றும் நித்யா மேனன் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகச் சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது 2020 சனவரி 24 ஆம் தேதி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஏன் இந்த மாற்றம்?

இந்தப்படத்தின் தணிக்கையின்போது தணிக்கைக்குழு, சைக்கோ என்கிற பெயர் வைக்க ஆட்சேபம் தெரிவித்ததாம்.

மனநலம் பாதிக்கப்பட்டோர் நலவாழ்வு நிறுவனங்கள், திரைப்படம் போன்ற பெரிய ஊடகங்களில் இது போன்று பெயர்களும் செயல்களும் தவறாகச் சித்தரிக்கப்படுவதால் சமுதாயத்தில் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன , எனவே இதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் என்று கோரிக்கை வைத்ததின் விளைவாகவே தணிக்கைக்குழு ஆட்சேபம் தெரிவித்ததாம்.

ஆனால் படக்குழு அந்தப் பெயர்தான் வேண்டும் என்று சொன்னதால், மறுதணிக்கைக் குழுவுக்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது.

அங்கே இந்தப் பெயர் வைப்பதற்கான அனுமதி கிடைத்துவிட்டதாம்.

இந்த வேலைகளில் கவனம் செலுத்தியதால் பட வெளியீட்டு வேலைகளில் ஈடுபடமுடியாமல் போனதென்றும் அதனால் பட வெளியீடு தள்ளிப் போனதென்றும் சொல்கிறார்கள்.

பிடிவாதமாக அந்தப் பெயர் வேண்டும் என்று நிற்பதற்கான காரணம் படம் வந்தால் தெரியுமாம்.

வரட்டும், பார்க்கலாம்.

Related Posts