ஹீரோ – திரைப்பட விமர்சனம்
மாணவர்களின் திறமைகளை அவர்கள் வாங்கும் மதிப்பெண்களை வைத்து எடை போடாதீர்கள் என்கிற கருத்தை வலியுறுத்திச் சொல்கிற படம் தான் ஹீரோ.
சின்ன வயதில் சக்திமான் போல் சூப்பர் ஹீரோவாகவேண்டும் என ஆசைப்படுகிற சிவகார்த்திகேயன் வளர்ந்து வாலிபனானதும் தவறான வேலைகள் செய்கிறார்.
தன்னை நம்பி வருகிற ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போகிற நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளில் அவருடைய அறிவுக்கண் திறக்கிறது.
அதன்பின் சூப்பர் ஹீரோவாக மாறுகிறார்.
தனக்குக் கொடுக்கப்படும் வேடங்களுக்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொள்ளும் சிவகார்த்திகேயன் இந்தப்படத்திலும் அதைச் செய்திருக்கிறார்.
நாயகி பின்னால் செல்லும் காட்சிகள் சுவாரசியம். போகப்போக சிவகார்த்திகேயனின் வேடம் சீரியசாகி படமும் சீரியசாகிவிடுகிறது.
நாயகி கல்யாணி பிரியதர்ஷன் சில காட்சிகளில் அழகாக இருக்கிறார். இந்தக் கதையில் அவருக்குப் பெரிதாக வேலை இல்லை. இடைவேளை வரைதான் படத்தில் இருக்கிறார்.
வானூர்தி பொறியியல் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற ஏழை மாணவி வேடத்தில் நடித்திருக்கும் இவானா சிறப்பு. நான் திருடியாண்ணா? எனக்கேட்டு அவர் கலங்கும் நேரம் நம் கண்களிலும் கண்ணீர்.
படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன்தான் ஆனால் இந்தக்கதையின் நாயகனாக இருக்கிறார் அர்ஜூன். அவருடைய அனுபவத்துக்கேற்ற வேடம். சரியாகச் செய்திருக்கிறார்.
வில்லனாக இந்தி நடிகர் அபய்தியோல் நடித்திருக்கிறார். ஆர்ப்பாட்டமில்லாமல் வில்லத்தனம் செய்து ஈர்க்கிறார்.
தொடக்கத்தில் கொஞசநேரம் வந்து சிரிக்க வைக்கிறார் ரோபோ சங்கர்.
அழகம்பெருமாள், குமரவேல் ஆகியோர் தங்கள் நடிப்பால் நிற்கிறார்கள்.
ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவில் இரண்டாம் பாதியில் நிறைய இருட்டுக்காட்சிகள்.
யுவனின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லை. பின்னணி இசையில் தன்னைத் தக்க வைத்துக் கொள்கிறார்.
கல்வி முறையில் மாற்றம் வேண்டும், புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும், மாணவர்களின் அறிவை அவர்களுடைய ரஃப் நோட்டுகளில் பாருங்கள் என்கிற கருத்துகளைச் சொல்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.
நல்ல கருத்துகளைச் சொல்லிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்த அவருக்கு அதைத் திரைமொழியாக்குவதில் குழப்பம் இருந்திருக்கிறது.
இதனால் சூப்பர் ஹீரோ சுமார் ஹீரோ ஆகிவிட்டார்.











