விமர்சனம்

கைதி – திரைப்பட விமர்சனம்

பத்தாண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளியில்
வந்தவுடனே தவறான புரிதல் காரணமாக காவல்துறையிடம் சிக்குகிறார் கார்த்தி.

பெற்ற மகள் அனாதை இல்லத்தில் இருப்பதை அறிந்து பார்க்கப் போகும் நேரத்தில் அவருக்கு இந்தச் சிக்கல்.

அதே நேரத்தில் 840 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கைப்பற்றுகிறார் நரேன். அதனால்
அவரையும் அவரது சகாக்களையும் கொல்லத் துடிக்கும் வில்லன் கூட்டம்.

இந்நிலையில் கார்த்தியை நரேன் சந்திக்கும் புள்ளியில் வேகமெடுக்கும் படம் இறுதிவரை வேகம் குறையாமல் பயணிக்கிறது.

தாடி மீசையுடன் நெற்றியில் திருநீற்றுப் பட்டை போட்டுக் கொண்டு மிரட்டுகிறார் கார்த்தி. மகளை நினைத்துக் கலங்கும் போது கண்ணீர் விட வைக்கிறார்.

சண்டைக்காட்சிகளில் கார்த்தி பலமானவர் என்றாலும் இப்படத்தில் வேறு மாதிரி கெத்து காட்டியிருக்கிறார்.

நரேன் நாயகனாக நடித்த படங்களில் கூட இவ்வளவு அழுத்தமான பாத்திரங்கள் அமையவில்லை. இதில் அவருக்கு சவாலான வேடம். தன் நடிப்பினால் அதற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறார்.

கார்த்தியின் மகளாக வரும் மோனிகா நெகிழ வைக்கிறார்.

காமாட்சியாக வரும் தீனா அங்கங்கே சிரிக்க வைக்கிறார்.

வில்லன் கூட்டத்தில் அன்புவாக வரும் அர்ஜுன்தாஸ் கவனிக்க வைக்கிறார். ரமணா, ஹரீஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி உள்ளிட்டோர் நன்று.

காவல் ஆணையர் அலுவலகத்தை நான்கு இளைஞர்களை வைத்துக்கொண்டு பாதுகாக்கும் ஜார்ஜுக்கு இந்தப்படம் பெரும் பெயர் பெற்றுத்தரும்.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும்பலம். அவருடைய திறமையை வெளிப்படுத்தக் கூடிய காட்சிகள் நிறைய அமைந்திருக்கின்றன.

சாம்.சி.எஸ் பின்னணி இசையில் படத்தை உயர்த்தியிருக்கிறார்.

கதாநாயகி இல்லாமல் நகைச்சுவைக் காட்சிகள் இல்லாமல் இரண்டரை மணி நேரம் படம் செய்து அதற்குள் ஒரு சமுதாய அக்கறையையும் வைத்து அதை கண்ணிமைக்காமல் பார்க்க வைத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

நம்ப முடியாத பல நிகழ்வுகளைத் தாண்டி படத்தை ரசிக்க வைத்திருப்பதும் அவருடைய பலம்.

Related Posts