சினிமா செய்திகள்

அசுரன் பட வசனத்துக்கு கருணாஸ் எதிர்ப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸின் மகன் கென் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அப்படியிருந்தும் இடம்பெறும் வசனங்கள், முக்குலத்தோர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் அதை உடனடியாக நீக்க வேண்டும் என கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..,

கலைப்புலி தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் இயக்கி வெளிவந்துள்ள ‘அசுரன்’ திரைப்படத்தில் “ ஆண்டபரம்பரை நாங்கதான்.. எங்ககிட்டேருந்து உங்களுக்கு எடம் வந்ததா? இல்லை உங்கக் கிட்டேருந்து எங்களுக்கு எடம் வந்ததா! என்ற வசனம் வருமிடத்தில் எதிர் தரப்பினர் பேசும் உரையாடலில் “ எத்தனை நாளாடா சொல்லிக் கிட்டே இருப்பீங்க ஆண்ட பரம்பரைன்னு” என்று முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக இக்காட்சி வழியாக வரும் உரையாடல் அமைந்திருக்கிறது.

மேற்கண்ட திரைப்பட வசனம் எங்கள் சமூக மக்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக இருப்பதால் இந்த வசனத்தை நீக்குமாறு இயக்குநர் வெற்றிமாறனிடம் கோரிக்கை வைத்தேன்.

எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் உடனடியாக நீக்கியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனுக்கும் அசுரன் படக் குழுவினருக்கும் எமது மனமார்ந்த நன்றியை முக்குலத்தோர் புலிப்படையின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு திரைப்படம் என்பது சமூகத்தை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக இருக்க வேண்டும். முகம் காட்டும் கண்ணாடி மீது கல்லெறிதல் கூடாது. அது உடைந்தால் பலரின் பாதங்களில் இரத்தம் பார்க்கும். அந்த நிலையை திரைப்படங்கள் எப்போதும் உருவாக்கிவிடக்கூடாது.

திரைப்பட வசனங்கள் வழியாக யார் மனதையும் எந்தத் திரைப்படமும் புண்படுத்தல் கூடாது என்பது எனது தாழ்மையான வேண்டு கோளாகும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts