சினிமா செய்திகள்

மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு – கைது செய்யப்படுவாரா?

வட இந்தியாவில் நடக்கும் கும்பல் வன்முறையைக் கண்டித்தும், பிரதமர் மோடி தலையிடக்கோரியும், ஜூலை 23 ஆம் தேதி திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா,வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி உட்பட முக்கியமான பிரபலங்கள் 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினர்.

அந்தக் கடிதத்தில்,

எங்கள் அன்பான நாட்டில் சமீபகாலமாக பல்வேறு சோக சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றைப் பார்க்கும் போது, அமைதியை விரும்பும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்ளும் எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.

முஸ்லிம்கள், தலித்துகள், பிற சிறுபான்மை இனத்தவர்களை அடித்துக் கொல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.2016 ஆம் ஆண்டு தலித்துகளுக்கு எதிராக நாட்டில் 840-க்கும் மேற்பட்ட வன்முறைகள் நடத்தப்பட்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

அதேபோல் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தை ஆயுதமாக்கி சிறுபான்மையினருக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் நடை பெறுகின்றன. இவற்றைத் தடுக்க நீங்கள் (பிரதமர்) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கும்பலாகச் சேர்ந்து அடித்துக் கொல்லும் சம்பவங்களை நாடாளுமன்றத்தில் நீங்கள் கண்டித்தீர்கள். அது போதாது பிரதமர் அவர்களே. அந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

ராமர் பெயரில் சிறுபான்மையினரை பயமுறுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள். கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. எனவே, கருத்து வேறுபாடு கொண்டவர்களை ‘தேசத்துக்கு எதிரானவர்கள்’ என்றும், ‘நகர நக்சல்கள்’ என்றும் முத்திரை குத்திவிடக் கூடாது

எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தக் கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில்,50 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் நாட்டின் தோற்றத்தை அவமானப்படுத்துவது போன்று இருக்கிறது. பிரதமர் மோடியின் பணியையும், செயலையும் குறைத்து மதிப்பிடுவதுபோன்று இருக்கிறது. ஆதலால், அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி இருந்தார்.

இதையடுத்து,ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி முசாபர்பூர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சூர்யகாந்த் திவாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து, இயக்குநர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத் துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல், அமைதியைக் குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியை பிடிஐ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த வழக்குப் பதிவு நீதிமன்றத்துக்குக் கணக்குக் காட்டுவதற்காக மட்டுமா? அல்லது உண்மையிலேயே நடவடிக்கை எடுப்பார்களா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Related Posts