விமர்சனம்

100 சதவீத காதல் – திரைப்பட விமர்சனம்

காதலர்களுக்குள் நான் என்கிற தன்முனைப்பு இருக்கவே கூடாது என்பதை விரல்நீட்டி வசனம் பேசாமல் காட்சிகள் மூலம் உணர்த்த முயன்றிருக்கும் படம் 100 சதவீத காதல்.

எதிலும் நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற நாயகன் ஜீ.வி.பிரகாஷ் படிப்பில்  எப்போதும் முதல்நிலை மாணவர். 

அவருடைய அத்தைபெண் ஷாலினி பாண்டே, ஜீ.வி.பிரகாஷ் வீட்டிலேயே தங்கிப் படிக்கிறார். ஜீ.வியிடம் பாடம் கற்று அவரையே மிஞ்சுகிறார். அதனால் அவர்களுக்குள் மோதல்.

அதன்பின் அவர்கள் இருவரையும் தாண்டி அதேகல்லூரியில் படிக்கும் யுவன்மயில்சாமி  முதல்நிலை எடுக்கிறார்.

முதல்நிலையை மட்டும் ஜீ.வியிடம் இருந்து பறிக்காமல் ஷாலினிபாண்டேவையும் பறிக்கிறார் யுவன்மயில்சாமி.

அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைச் சொல்கிறது படம்.

ஸ்ட்ரிக்ட் ஆபிசராக ஜி.வி.பிரகாஷ் அறிமுகமாகிறார். அரட்டல் உருட்டல் என்று அதகளம் செய்யும் ஜீ.வி,ஓரிடத்தில் யார்றா ரெண்டாவது? எனத் தெனாவெட்டாகக் கேட்கும்போது நீதான் என்கிற பதிலில் அடைகிற அதிர்ச்சி பக்கென சிரிக்க வைக்கிறது.
 
ஷாலினிபாண்டேயிடம் தன் காதலைப் பற்றி விவரிக்கும் காட்சியில் ஜீ.வியின் நடிப்பில் மெருகேறியிருக்கிறது.

ஷாலினிபாண்டே இடையழகைக் காட்டி ஈர்க்கிறார். வேடத்துக்குப் பொருத்தமாக நடித்தும் இருக்கிறார். மாமா மாமா என்று அவர் ஜீவியை அழைப்பது கொஞ்சுவது போலவே இருக்கிறது.

அழகாகப் பேசி, அளவாக நடித்து கவர்கின்றன ஜீ.வி.பிரகாஷ் வீட்டில் இருக்கும் ஆறு குழந்தைகள். அவர்கள் யார்? எதற்காக அங்கே இருக்கிறார்கள்? என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை.

நாசர், ஜெயசித்ரா, தலிவாசல் விஜய், ரேகா, ஆர்.வி.உதயகுமார், மனோபாலா, அப்புக்குட்டி என படத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

மனோபாலா தம்பிராமையா ஆகியோர் வரும் காட்சிகள் அலுப்பூட்டுகின்றன. அவற்றைத் தாரளமாக நீக்கிவிடலாம்.

ஆர்.கணேஷ் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான அளவு இருக்கிறது.

ஜீ.வி.பிரகாஷே இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையில் காட்சிகளின் தன்மையை பார்வையாளர்களுக்குக் கடத்த முயன்றிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் மு.காசிவிஸ்வநாதன் படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க வேண்டும். 

தில்லானா மோகனாம்பாள் காலத்துக் கதையை எடுத்துக் கொண்டு பயணித்திருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.சந்திரமெளலி.
திரைக்கதையிலும் பலவீனமாக இருக்கிறார்.

ஜீ.வி.பிரகாஷின் நடிப்பில் முன்னேற்றம், ஷாலினிபாண்டேவின் அன்பு மற்றும் அழகு, இருவரின் காதல் காட்சிகள் ஆகியன படத்துக்குப் பலம்.

Related Posts