திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் அலட்சியம் – கே.பாக்யராஜூக்கு தெரியுமா?
ரஜினி விஜய் சூர்யா உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்கள் முதல் சிறு படங்கள் வரை கதைத் திருட்டுச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பது தொடர்ந்து நடக்கிறது.
இவற்றை வெளிக்கொண்டு வருவதில் தமிழ்த் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் முக்கியப் பங்காற்றி வருகிறது.
அச்சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்தான் கதையைப் பதிவு செய்யமுடியும் என்கிற விதி இருக்கிறது.
அந்த விதியால் ஒரு வினை வந்திருக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு….
தன்னம்பிக்கைப் பேச்சாளராக அறியப்பட்டவர் ஏ.எல்.சூர்யா. இவர் எழுத்தாளரும் கூட. பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவற்றில் ஒன்று அனிதா பத்மா பிருந்தா என்கிற நாவல்.
திரைத்துறையில் நடைபெற்ற பல உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த நாவலாக உள்ளது.
இந்த நாவலைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்த ஏ.எல்.சூர்யா, அதைத் திரைக்கதையாக எழுதியிருக்கிறார்.
அத்திரைக்கதையை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப் போனால், சங்கத்தில் உறுப்பினராக இருந்தால்தான் பதிவு செய்ய முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதை ஏற்றுக்கொண்ட ஏ.எல்.சூர்யா, சங்க ஊழியர்கள் கேட்ட அனைத்து விபரங்களையும் வழங்கியதோடு,சேர்க்கைக் கட்டணமாக அவர்கள் கேட்ட ஏழாயிரம் ரூபாயை வரைவோலையாக எடுத்துக் கொடுத்துவிட்டாராம்.
அதன்பின், ஒரு மாதத்துக்குள் எழுத்தாளர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால்,ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அடையாள அட்டை கொடுக்கவில்லை.
சங்க ஊழியர்களைத் தொடர்புகொண்டு கேட்ட போதெல்லாம், இந்த வாரம் கிடைக்கும் அடுத்த வாரம் தருவோம் என்று இழுத்தடித்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில், நாங்க கொடுக்கும்போதுதான் கொடுப்போம் அதுவரைக்கும் அமைதியா இரு இல்லேன்னா உன்னால முடிஞ்சத செஞ்சிக்க என்று சொல்லிவிட்டார்களாம்.
இதனால் கொதித்துப் போயிருக்கிறார் ஏ.எல்.சூர்யா. எனக்கு மட்டுமின்றி இன்னும் நிறையப் பேருக்கு இப்படி நடப்பதாகத் தெரிகிறது. எழுத்தாளர்கள் சங்கத்தின் இந்த அலட்சியப் போக்குக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்கிறார்.
தற்போது எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் கே.பாக்யராஜுக்கு இந்த விசயம் தெரியுமா?











