எஸ்.ஏ.சி விஜய்சேதுபதிக்கு ஆர்.கே.செல்வமணி கண்டனம்
காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இக்கோரிக்கையை ஏற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி, அறிவிக்கப்பட்ட நிதியில் முதல் கட்டமாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை ஆர்.கே. செல்வமணியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
செப்டம்பர் 16,2019 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் க. சண்முகம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆர்.கே.செல்வமணி கூறியதாவது….
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு 1 கோடி ரூபாய் வழங்கியதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல்வரை இழிவு படுத்தும் வகையில் கேப்மாரி (இந்தப்பெயரை சுருக்கமாக சி.எம் என்று சொல்கிறார்கள்) என்கிற படமெடுத்து வரும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்குக் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கும் கண்டனம் தெரிவிக்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.











