விமர்சனம்

பக்ரீத் – திரைப்பட விமர்சனம்

பக்ரீத் என்கிற பெயரையும் படத்தில் இருக்கும் ஒட்டகத்தையும் பார்த்தால் உங்கள் மனசுக்குள் ஒரு கதை தோன்றுமல்லவா? அதை அப்படியே படமாக்கியிருக்கிறார்கள்.

விவசாயத்தை நேசிக்கிற விவசாயிக்கு எதிர்பாராத ஒரு தருணத்தில் ஒட்டகம் ஒன்று கிடைக்கிறது. அதை குழந்தை போலப் பாவித்து வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் அதனால் சில சிக்கல்கள். அவற்றை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் படம்.

விவசாயம்தான் உயிராதாரம் அதை விட்டுவிடக்கூடாது என்று பிடிவாதமாகப் போராடும் விவசாயி வேடத்தில் நடித்திருக்கிறார் விக்ராந்த். நான்கு முழ வேட்டியும் கசங்கிய சட்டையும் அணிந்து அவர் நடக்கும்போது அச்சு அசலாக ஒரு விவசாயி கண்களுக்குள் நிறைகிறார்.

சாடிக்கேத்த மூடி போல விவசாயக் குடும்பத்துப் பெண்ணாக மாறியிருக்கிறார் விக்ராந்தின் மனைவியாக நடித்திருக்கும் வசுந்தரா.

இவர்களின் குழந்தையாக நடித்திருக்கும் பேபி ஷ்ருத்திகா கண்கள் படும் அழகு. அதன் மழலை மொழி கேட்கக் கேட்க இன்பம்.

இவர்களோடு ஒட்டகமும் ஒரு பாத்திரமாகவே இருக்கிறது. காட்சிக்கேற்ப அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

விவசாயக் குடும்பத்தில் கால்நடைகளும் உறுப்பினர்கள்தாம். அதுபோல ஒட்டகமும் அந்தக் குடும்பத்தில் இன்னொரு குழந்தையாகிறது.

உணவு மற்றும் இருப்பிடச் சிக்கல் காரணமாக அதை ராஜஸ்தான் கொண்டுபோய் விட்டுவிடும் முயற்சியில் இறங்கும் விக்ராந்த், அந்தப் பயணத்தில் சந்திக்கும் சிக்க்ல்கள் சமகால அரசியலை விளாசுகின்றது.

இமானின் இசையில் மணிஅமுதவன் எழுத்தில் சித்ஸ்ரீராம் பாடியிருக்கும் ஆலங்குருவிகளா பாடல் அருமை. மற்ற பாடல்களும் குறைவில்லை.

ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியிருக்கிறார் ஜெகதீசன்சுபு.

விவசாயம் செய்து மகிழ்ச்சியாக இருப்பதாக வந்திருக்கிறது படம். அதுமட்டுமின்றி படத்தில் விக்ராந்துக்கு அமைந்தது போல அண்ணன் மற்றும் மனைவி குழந்தைகள் எல்லாம் நெஞ்சம் நிறைய வைக்கின்றன.

நாம் நேசிக்கும் உயிர்களை வைத்து வடநாட்டில் நடக்கும் அரசியலைச் சாடியிருக்கிறார் இயக்குநர்.

Related Posts