தொரட்டி – திரைப்பட விமர்சனம்
தொரட்டி என்பது ஆடுகளுக்கு தழை (உணவு) ஒடிக்கப் பயன்படும் கூர் அருவாவின் பெயர்.
அப்பெயரில், ஊர் ஊராகச் சென்று ஆட்டுக்கிடை போட்டு வாழும் மக்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு உருவாகியிருக்கிறது இப்படம்.
நாயகனாக நடித்திருக்கும் ஷமன் மித்ருவின் பாத்திரம், நாயகன் என்பதற்கான இலக்கணங்களை உடைத்து எதார்த்த இளைஞனைப் பிரதிபலிக்கிறது. அவ்வேடத்துக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்.
நின்று கொண்டே தூங்குவது, நாயகியிடம் மருண்டு நிற்பது கடைசியில் வெறி கொண்டு திரிவது ஆகிய பாவங்களில் தேர்ச்சி பெறுகிறார்.
படத்தின் பெரும் பலம் நாயகி சத்யகலாதான். எண்ணெய் வைத்து வழித்துச்சீவிய தலையும் பெரிய பொட்டும் உருண்டு திரண்ட கண்களுமாக அவருடைய தோற்றமே ஈர்க்கிறது.
பெண் பார்க்க வரும்போதே குடித்துவிட்டு வருகிறவனுக்கு வைத்தியம் செய்யும் காட்சி, கருத்தளவில் விமர்சனம் இருந்தாலும், காட்சியாக ஆகச்சிறந்த காட்சி. வசன உச்சரிப்புகளில் சபாஷ் பெறுகிறார்.
நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் அழகு, அம்மா பேச்சி ஆகியோர் அச்சில் வார்த்த ஆட்டுக்கிடைக்காரர்களாகவே இருக்கிறார்கள்.
நாயகியின் பெற்றோர் குமணன், ஸ்டெல்லா, நாயக்ர்களின் கூடா நண்பர்களாக வருகிற சுந்தர்ராஜ்,முத்துராமன், சீலன் ஆகியோரும் கனகச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
குமார்ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கதையைக் காட்சிகளில் விளக்கிச் செல்கிறது.
வேத்சங்கர் இசையில் பாடல்கள் அனைத்தும் சுகம். மண்ணின் மணம் குழைத்து தமிழள்ளிக் கொடுத்திருக்கிறார் சினேகன்.
முன்னொரு காலத்தில் இப்படி ஒரு தொழில் இருந்தது. அது இயற்கையையும் விவசாயத்தையும் பேணிக் காத்தது என்பதை இப்போதைய இளைய தலைமுறைக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் உரத்துச் சொல்லும் கலைப்படைப்பாக அமைந்திருக்கிறது தொரட்டி.
அதை அழகாகக் கொடுத்து பாராட்டுப் பெறுகிறார் எழுதி இயக்கியிருக்கும் பி.மாரிமுத்து.











