அவருக்கு உரிமை இருக்கிறது – சூர்யாவுக்கு கமல் ஆதரவு
அண்மையில் நடந்த அகரம் அறக்கட்டளை விழாவில் பேசிய நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்துப் பேசி அதிலுள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, அது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லையென்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார்.
இதனால், பாஜகவின் தலைவர்களும், அதிமுக அமைச்சர்களும் தனிப்பட்ட முறையில் சூர்யா மீது தாக்குதல் தொடுத்தனர். தனிப்பட்ட முறையில் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
நடிகர் சூர்யாவுக்கு கி.வீரமணி, சீமான் உள்ளிட்ட அரசியல்தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்,ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்துவருகிறார்கள்.
எனவே கல்வி குறித்துப் பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு.
புதியகல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு.
மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசிவரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு.
இவ்வாறு கமல் கூறியிருக்கிறார்.











