கேம் ஓவர் தமிழ்ப்படமா? டப்பிங் படமா? – தயாரிப்பாளர் விளக்கம்
நயன்தாரா நடித்த `மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன்,அதற்கடுத்து எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் `இறவாக்காலம்’ படத்தை இயக்கினார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் அஸ்வின் சரவணன் அடுத்ததாக `கேம் ஓவர்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
நடிகை தாப்சீ கதாநாயகியாக நடித்துள்ளார். கதாநாயகன் கிடையாது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்தப் படத்தில் தாப்சீ வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரான் ஈதன் யோஹன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படம் இந்தியில் குரல்மாற்று செய்து வெளியாகவிருக்கிறது. இந்த உரிமையை பிரபல இயக்குநரும், `இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவருமான அனுராக் காஷ்யப் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு ஜூன் 6 அன்று நடைபெற்றது.
அதில் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்,இசையமைப்பாளர் ரான் ஈதன் யோஹன்,இயக்குநர் அஸ்வின் சரவணன், நாயகி தாப்சீ,தயாரிப்பாளர் சசிகாந்த்,ஒளிப்பதிவாளர் வசந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பெசிய தயாரிப்பாளர் சசிகாந்த், இப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்ற திருப்தி ஏற்பட்டிருக்கிறது.
வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரிக்கும் எங்கள் பயணம் இப்படியே தொடரும்.
இப்படம் நேரடிப்படமா? டப்பிங் படமா? என்கிற கேள்விகள் வருகின்றன. இது நேரடியாக தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறோம் என்றார்.
இயக்குநர் அஸ்வின் சரவணன் பேசிய போது, இறவாக்காலம் படம் என்னாச்சு? என்கிற கேள்விகளுக்கு நடுவே இக்கதையை எழுதினேன். நல்ல கதைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கக் கூடிய தயாரிப்பாளராக சசிகாந்த் இருந்ததால் இப்படம் உருவானது.
இது இல்லையென்றால் நான் இறவாக்காலத்திலேயே மூழ்கி முடங்கியிருப்பேன்.
தாப்சீ அருமையாக நடித்திருக்கிறார். இப்படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
நாயகி தாப்சீ பேசுகையில், இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோது இதில் ஹீரோ யார் என்று பலர் கேட்டார்கள். இப்பட இயக்குநர் தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்புத் தளத்திலிருந்த எல்லா ஊழியர்கள் ஆகியோர்தாம் இப்படத்தின் ஹீரோஸ்.
இப்படம் மூலம் திரும்ப தமிழ்த்திரையுலகுக்கு வந்திருக்கிறேன் மகிழ்ச்சி என்றார்.











