அஜீத் பட்ட கஷ்டம் எனக்கே நடந்துவிட்டது – ராஜீவ்மேனன் வெளிப்படை
ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் 1997 ஆம் ஆண்டு பிரபுதேவா கஜோல், அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடித்த மின்சார கனவு படத்தையும் 2000 ஆம் ஆண்டில், அஜீத்,மம்முட்டி, ஐஸ்வர்யாராய்,தபு உள்ளிட்ட பலர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தையும் இயக்கினார்.
அதன்பின் பத்தொன்பது ஆண்டுகள் கழித்து 2019 பிப்ரவரி 1 ஆம் தேதி அவர் இயக்கத்தில் உருவான சர்வம் தாளமயம் படம் வெளியாகவிருக்கிறது.
ஜீ.வி.பிரகாஷ், நெடுமுடிவேணு, அபர்ணா பாலமுரளி, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள அப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்ட போது ராஜீவ்மேனன் பேசியதாவது,….
நான் இயக்கிய முதல் படத்தில் முடிதிருத்துபவரின் காதல் கதையைச் சொன்னேன். அடுத்த படத்தில், ஓர் உதவி இயக்குநர் படம் இயக்குவதற்காகப் படுகிற கஷ்டங்களைச் சொல்லியிருந்தேன். உதவி இயக்குநராக அஜீத் நடித்திருந்தார்.
அந்தப்படம் பார்த்த பலரும், உதவி இயக்குநரின் கஷ்டம் உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்களுக்குப் படம் இயக்குகிற வாய்ப்பு தங்கத்தட்டில் வைத்து தரப்பட்டதே? என்று கேட்டார்கள்.
அப்போது அப்படி நடந்தது. ஆனால் அந்தப்படம் வெளியாகி பத்தொன்பது ஆண்டுகள் கழித்து அடுத்த படம் வெளியாகிறது. இந்தப்படம் எடுப்பதற்குள் நான் பட்ட பாடு பெரிது.
நான் கற்பனையாக எழுதிய கதையில் அஜீத் நடித்தார். என்னுடைய அந்தக் கற்பனை எனக்கே நிஜமாக நடந்துவிட்டது. இந்தப்படத்தை எடுத்து முடிப்பதற்குள் அவ்வளவு கஷ்டங்களைச் சந்தித்துவிட்டேன்.
எல்லாவற்றையும் தாண்டி இப்போது இந்தப்படம் வெளியாகிறது
இவ்வாறு அவர் பேசினார்.











