சினிமா செய்திகள்

இன்னா செய்த ஷங்கருக்கு நன்னயம் செய்யும் ஏ.ஆர்.ரகுமான்

1996 ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர்.

கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படம் தொடங்கி நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்ததுடன் நிற்கிறது.

படத்தின் செலவு மற்றும் வெளியீட்டுத்தேதி ஆகிய விசயங்களில் படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக அடுத்த கட்ட நகர்வு நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தை வேறு தயாரிப்பு நிறுவனத்துக்கு மாற்றும் முயற்சியில் ஷங்கர் ஈடுபடுவதாக ஒரு தகவல் உலவுகிறது.

அதைவிடப் பெரிய செய்தி, இந்த விசயத்தில் ஷங்கருக்கு ஏ.ஆர்.ரகுமான் உதவி செய்வதாகச் சொல்லப்படுவதுதான்.

இந்தியன் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த நிலையில் இந்தியன் 2 படத்துக்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்து ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிர்ச்சி கொடுத்தார் ஷங்கர்.

ஆனால் ஷங்கர் செய்த இந்தத் தவறைப் பெரிதுபடுத்தாமல் ஷங்கருக்கு ஆதரவாக மும்பையைச் சேர்ந்த பெரிய நிறுவனத்திடம் பேசிவருகிறாராம் ஏ.ஆர்.ரகுமான்.

அவருடைய முயற்சி வெற்றியடைந்தால் படத்தயாரிப்பு நிறுவனம் மட்டுமல்ல இசையமைப்பாளரும் மாறலாம்.

Related Posts