விமர்சனம்

உறியடி 2. – திரைப்பட விமர்சனம்

ஸடெர்லைட் போன்றதொரு நாசகார ஆலையால் நூற்றுக்கணக்கானோர் இறந்து போய் ஏராளமானோர் ஊனமாகின்றனர்.

அந்த ஆலையிலேயே பணியாற்றிய நாயகனும் அவருடைய நண்பர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கப் போராடுவதுதான் உறியடி 2.

நாயகன் விஜயகுமார், தொடக்கத்தில் ஒரு சாதாரண வீட்டுப் பையனாக வந்து போகப்போக பெரும் புரட்சிக்காரராக மாறுகிறார்.

அவருடைய வேடம் வலிமையானது.அதற்குப் பொருத்தமான நடிப்பை அவர் வெளிப்படுத்தவில்லை.

நாயகி விஸ்வமயா. நல்ல வரவு. நாயகனின் புரட்சி மற்றும் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்.

காதலும் காதல் காட்சிகளும் பெரிதாக இல்லை.

நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் சுதாகர், அப்பாஸ் அரசியல்வாதிகளாக நடித்திருக்கும் சங்கர், ஆனந்த்ராஜ் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

ஆலை முதலாளி துரை ரமேஷ் பாத்திரப்படைப்பு பயத்தை வரவழைக்கிறது.

பிரவீன்குமார் ஒளிப்பதிவு நேர்த்தியாக இருக்கிறது.

கோவிந்த்வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. கடவுளே நீ இருக்கிறாயா? என்று கோவிந்த்வசந்தா பாடும்போது பாடல்வரிகளும் காட்சிகளும் கலங்க வைக்கின்றன .

பின்னணி இசையில் கொஞ்சம் நிதானமாக இருந்திருக்கலாம். பல இடங்களில் தேவைக்கு மேலே வாசிக்கிறார். சத்தமும் அதிகம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் மற்றும் ஆலை முதலாளிகளின் கள்ள உறவை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறார் இயக்குநர் விஜயகுமார்.

முதல்பாதிப் படத்தில் ஒரு நாசகார ஆலை, தங்கள் இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதை சரியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.இடைவேளைக் காட்சி அதிர்வை ஏற்படுத்துகிறது.

இரண்டாம் பாதியில் அந்த ஆலையால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அதற்கு எதிரான போராட்டங்களையும் காட்டுகிறார்கள்.

அவை பல இடங்களில் சலிப்பூட்டுகின்றன.

இறுதியில் நடக்கும் நிகழ்வுகள் வெகுமக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு என்றாலும் அதுவரை திரைக்கதையில் இருந்த ஒழுங்கைக் குலைத்துவிட்டது.

நல்ல சிந்தனை கொண்ட இயக்குநர் கடைசியில் போகாத ஊருக்கு வழி சொல்லி சராசரி சினிமா எடுத்துவிட்டார்.

இப்படி ஒரு க்ளைமாக்ஸை சூர்யா எப்படி ஒப்புக்கொண்டு தயாரித்தார்? என்பது புரியவில்லை.

Related Posts