சார்லி சாப்ளின் 2 – திரைப்பட விமர்சனம்
நாயகி நிக்கிகல்ராணியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார் பிரபுதேவா. அவரிடம் காதலைச் சொல்வதிலேயே குழப்பம். அதைத்தாண்டி அவரிடம் காதலை வெளிப்படுத்தி திருமணம் வரை செல்கிறார் பிரபுதேவா.
அந்தத் திருமணத்துக்கு முந்தைய நாள் பிரபுதேவா செய்யும் ஒரு தவறால் பெரும் குழப்பம் ஏற்பட்டு திருமணமே நின்றுவிடும் ஆபத்து. அதை எப்படி பிரபுதேவா சமாளிக்கிறார் என்பதுதான் படம்.
பிரபுதேவாவைப் பற்றி நடிகர் சிவா சொல்கிற மாதிரி வயசே தெரியாமல் இருக்கிறார். மிகப்பெரிய குழப்பம் ஏற்படும் போதும் அதிகம் பதறாமல் அமைதியாக இருந்தே அவற்றை பிரபுதேவா எதிர்கொள்ளும் விதம் நன்று. திரைக்கதைக்குத் தேவையே இல்லாத சணடைக்காட்சி என்றாலும் பிரபுதேவா நன்றாகச் சண்டையும் செய்கிறார்.
தமிழ்த்திரையுலகில் ரம்பா இல்லாத குறையைத் தீர்த்து வைக்கும் தொடையழகியாக நிக்கி கல்ராணி இருக்கிறார். படம் முழுக்க தாராளமாக நடித்து இளைஞர்களைக் கவர்கிறார்.
ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டும் வருகிற ஆதாசர்மாவும் தன் பங்குக்குக் கவர்ச்சி காட்டி ரசிகர்களைக் கிறங்கடிக்கிறார்.
துபாய்ராஜாவாக வருகிற விவேக்பிரசன்னா படத்தில் நடக்கிற எல்லாக் குழப்பங்களுக்கும் காரணமாக இருக்கிறார். இப்படி ஒரு நண்பன் யாருக்கேனும் இருந்தால் அவனை கிட்டயே சேர்க்கக்கூடாது என்பது இப்படம் சொல்லும் பாடம்.
முதல்பாகத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்திருந்த பிரபுவுக்கு இந்தப்படத்தில் நாயகியின் தந்தையாகப் பதவி உயர்வு. அவரும் அதை ஏற்றுக்கொண்டு பொறுப்பாக நடித்திருக்கிறார்.
செளந்தர்ராஜனின் ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாக்கியிருக்கிறது.
அம்ரீஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் பொருத்தம்.
படம் முழுக்க ரசிகர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஷக்திசிதம்பரம். சில இடங்களில் அவர் நினைத்தது நடக்கிறது.
படம் தொடங்கியதிலிருந்து திரையில் ஒலிக்கும் சின்ன மச்சான் பாடலின் பின்னணி இசையால் அந்தப்பாடல் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பில் மொத்தப்படமும் நகர்கிறது.
பிரபுதேவாவை நம்பி எந்தக்கதையையும் எடுக்கலாம் என்பதற்கு இப்படம் ஒரு சான்று.











