September 12, 2026
விமர்சனம்

எழுமின் – திரைப்பட விமர்சனம்

நிஜ வாழ்வில் நடக்கவே நடக்காத சாகசங்களைக் கதாநாயகர்கள் திரையில் நிகழ்த்தும்போது பார்த்து கைதட்டி ரசிக்கிறோம்.

இந்தப்படத்தில் அனைவரும் செய்யக்கூடிய செய்யவேண்டிய நல்ல விசயத்தை நயம்படச் சொல்லியிருக்கிறார்கள்.

பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கீர்த்திகா, தீபிகா ஆகிய ஆறு சிறியோர்தான் இப்படத்தின் நாயகர்கள்.

அறுவரும் பள்ளியில் படித்துக்கொண்டே தற்காப்புக்கலைகளிலும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
அவர்கள் அவரவர் கலைகளில் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அளவிலான போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறத் தயாராகும் நேரத்தில் அவர்களுக்கு வருகிற சோதனைகள் அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதுதான் படம்.

சிறுவர்கள் கொடுத்த வேடத்துக்காகக் கடுமையாக உழைத்து சிறப்புச் சேர்த்திருக்கிறார்கள்.

தெருவில் நடந்து செல்லும் பெண்ணிடம் நகையை அறுத்துச் செல்லும் திருடனிடம் போராடி நகையை மீட்கும் காட்சி சிறப்பு.

க்ளைமாக்ஸில் அதேபோல் பெண்ணின் கழுத்தில் வில்லன் கத்தி வைக்கும்போது திரையரங்கமெங்கும் கைதட்டல்கள். அதற்கு மிகப்பொருத்தமாகச் சண்டையிட்டு சிறுவர்கள் அசத்தியிருக்கிறார்கள்.

எப்போதும் சிரிக்கவைக்கும் விவேக் இந்தப்படத்தில் சிந்திக்கவும் வைக்கிறார்.மகன் இறந்துவிட்ட அதிர்ச்சியில் பித்துப் பிடித்து அவர் நடக்கும் நடையில் கலங்கவைக்கிறார். பல அவமானங்களுக்குப் பின்னும் படத்தில் நடித்திருக்கும் பெற்றோரிடம் அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொரு பெற்றோருக்கும் பொருந்தும்.

நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தேவயானி, அப்படியே இருக்கிறார். அப்படியே நடித்திருக்கிறார். அவரை நம்பி டூயட் பாட்டு கூட வைத்திருக்கலாம்.

அழகம்பெருமாள், பிரேம்குமார், ரிஷி உள்ளிட்டு படத்தில் நடித்திருக்கும் அனைவரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள். செல்முருகன் சிரிக்கவைக்கிறார்.

விளையாட்டுத்துறையில் நடக்கும் அரசியல்களைப் பிரச்சாரமாக இல்லாமல் திரைக்கதையோட்டத்துடன் சொல்லியிருப்பது நன்று.

கோபிஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். கணேஷ்சந்திரசேகரனின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை மட்டுமின்றி ஊக்கம் ஊட்டுபவையாக அமைந்திருக்கின்றன. ஸ்ரீகாந்த்தேவாவின் பின்னணி இசையும் இயல்பு.

எதிர்காலத்தை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்கிற எண்ணத்தை விதைத்திருக்கிற இயக்குநர் வி.பி.விஜி பாராட்டுக்குரியவர்.

அதைப் பாடம் போல் எடுக்காமல் பொழுதுபோக்குடன் கூடிய படமாக எடுத்திருக்கிறார்கள்.

Related Posts