ராஜா ரங்குஸ்கி – திரைப்பட விமர்சனம்
நாயகன் மெட்ரோசிரிஷின் பெயர் ராஜா, நாயகி சாந்தினியின் பெயர் ரங்குஸ்கி. படத்தின் தலைப்புக்கு விடை கிடைத்துவிட்டதா?
அடுத்து ரங்குஸ்கி என்றால் என்ன அர்த்தம்?என்ற கேள்வி வரலாம். புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். அதனால் அவர் ரங்குஸ்கி என்கிற புனைபெயர் வைத்திருந்தார். இப்படத்தின் நாயகியும் தன்னை எழுத்தாளர் என்று சொல்லி ரங்குஸ்கி என்கிற புனைபெயரை வைத்துக்கொண்டிருக்கிறார்.
ஒரு குடியிருப்பின் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் நாயகி சாந்தினி மற்றும் அனுபமாகுமார் ஆகிய இருவருக்கும் பொதுவான நண்பர் அப்பகுதி காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர் மெட்ரோசிரிஷ்.
திடீரென அனுபமாகுமார் கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலையை யார் செய்தது? என்கிற தேடலில் நாயகன் ராஜா மீதே கொலைப்பழி விழுகிறது. அது உண்மையா? இல்லையா? என்பது தான் படம்.
நாயகன் மெட்ரோசிரிஷ், காவலர் வேடத்துக்கு உடல்பொருத்தம் இருக்கிறது. துடிப்பாக இருக்கிறார். நடிப்பில் இன்னும் முன்னேற வேண்டும்.
நாயகி சாந்தினி படத்தின் பெரும்பலம். அவருடைய வேடம் சுவாரசியமாக இருக்கிறது.நன்றாக நடித்திருக்கிறார். சில இடங்களில் அழகாகத் தெரிகிறார். சில இடங்களில் சரியில்லை. ஒளிப்பதிவாளருக்கு அவர்மேல் கோபமோ?
பழங்காலப் பொருட்களைச் சேகரிக்கும் அனுபமாகுமார், காவல்துறை அதிகாரியாக வருகிற சத்யா, ஜெயகுமார், நாயகனின் நண்பராக நடித்திருக்கிற க்ல்லூரி வினோத் ஆகியோர் நன்று. கல்லூரி வினோத் அங்கங்கே சிரிக்கவைக்கிறார்.
திகில் மர்மப் படத்துக்கான இசையைப் பொருத்தமாகக் கொடுத்திருக்கிறார் யுவன்ஷங்கர்ராஜா.
திகில் படத்துக்கேற்ற ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளர் யுவா, நடிகர்கள் விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒரு சின்னப் புள்ளியில் தொடங்கி முழுமையாக உருப்பெறும் அழகான கோலம் போல திரைக்கதையை அமைத்திருக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் தரணிதரன்.
திகில் மர்மப் படமென்றாலும் அதற்குள், இன்னும் கொஞ்ச நேரம் தொடராதா என்று எண்ணக்கூடிய அழகான காதலையும் வைத்திருக்கிறார் இயக்குநர்.
காதலில் ஏமாற்றக்கூடாது பொய் சொல்லக்கூடாது உள்ளிட்ட மூன்று விசயங்களைத் தான் செய்வதாக நினைத்து குற்ற உணர்வு கொள்ளும் நாயகன், கடைசியில் உண்மையை உணருவது இக்கால இளைஞர்களுக்கு நல்ல பாடம்.











