காலா என்கிற கரிகாலன் – திரைப்பட விமர்சனம்
மும்பையில் தமிழர்கள் பெருமளவு வசிக்கும் தாராவி பகுதியை தூய்மை இந்தியா திட்டம் என்ற பெயரில் அபகரித்து தம் அதிகாரத்தை நிலைநிறுத்த நினைக்கும் அதிகார வர்க்கத்துக்கும், நிலத்தை வாழ்வாகக் கருதும் உழைக்கும் வர்க்கத்துக்குமான போராட்டம் தான் காலா.
உழைக்கும் மக்களுக்குத் தலைவராக விளங்கும் ரஜினியின் பெயர் காலா என்கிற கரிகாலன் என்பதால் படத்தின் பெயர் காலா.
சூப்பர்ஸ்டார் என்கிற அந்தஸ்தை அடைந்திருந்தாலும் நல்ல நடிகர் என்று பெயரெடுக்க அவருக்கு அமைந்த படங்களில் இதுவும் ஒன்று. சில இடங்களில் நன்றாக நடித்து நற்பெயர் பெறுகிறார். அதுவும், முன்னாள் காதலியைப் பல்லாண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் காட்சியில் கண்களாலேயே கலங்கும் இடத்திலும், குமாரு யாரு இவரு? என்று அதகளம் செய்யும் இடத்திலும் ரஜினியை எல்லோருக்கும் பிடிக்கும்.
ரஜினியின் மனைவியாக வரும் ஈஸ்வரிராவ், நண்பராக வரும் சமுத்திரக்கனி, மகன்களாக நடித்திருக்கும் வத்திக்குச்சி திலீபன், மணிகண்டன், ரஜினியின் முன்னாள் காதலியாக வரும் ஹீமோகுரோஷி ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.
துணை வில்லன்களாக சம்பத், ரவிகாளே, ஷாயாஜிஷிண்டே உட்பட சிலர் இருக்கிறார்கள். ஆனால் மூலஸ்தானராக வரும் நானாபடேகர் தன் நடிப்பினால் அவர் செய்யும் கொடுஞ்செயல்களையும் ரசிக்கவைக்கிறார்.
அவரக் கொன்னுடுவீங்களா? என்று பேத்தி கேட்டதும் அட்டகாசமாகச் சிரித்தபடி என்ன செய்யறது வால்மீகி அப்படித்தானே எழுதி வச்சிருக்கான் என்று நானாபடேகர் பேசுவதற்காகவே அவருக்குக் கொடுத்த சம்பளம் சரியாகிவிட்டது, மீதியெல்லாம் இலவசமாக நடித்த மாதிரி.
இலவசம் என்பதற்காக ஏனோதானோவென்றெல்லாம் இல்லை ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டுகிறார். இன்னும் சொல்லப்போனால் ரஜினியோடு அவர் திரையைப் பகிர்ந்து கொள்ளும் காட்சிகளில் ரஜினி நம் கண்களுக்குத் தெரிவதே இல்லை.
தாராவி பகுதியை உருவாக்கிய கலை இயக்குநர் த.ராமலிங்கமும், அடஹி அழகாகக் காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் முரளியும் பாராட்டுக்குரியவர்கள். மழையில் குடையுடன் ரஜினி போடும் சண்டையும் இறுதிக்காட்சிகளும் முரளியின் திறமைக்குச் சான்றுகள்.
சந்தோஷ்நாராயணன் படத்துக்குப் பலமாக இருந்திருக்கலாம். ஆனால் இல்லை. ஆழமான பின்னணி இசையும் அழகான பாடல்களும் அமைந்திருந்தால் இந்தக் கதைக்களம் பல உயரங்களைத் தொட்டிருக்கும். கண்ணம்மா போதவில்லை, கற்றவை பற்றவை, தங்கச்சிலை ஆகிய பாடல்கள் ஆறுதல்.
நிலம் எங்கள் உரிமை எனும் முழக்கத்துடன் புத்தர், அம்பேத்கர், இரட்டைமலைசீனிவாசன், தந்தை பெரியார் ஆகிய பெரியோரை துணைகொண்டு, படம் முழுக்க ரஜினிக்கு கறுப்புச்சட்டையும் நீலச்சட்டையும் மட்டுமே கொடுத்து,இயக்குநர் பா.ரஞ்சித் அடித்து ஆடியிருக்கிறார்.
ராமராஜ்யம் நடத்தப்போவதாகச் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் ராமனை வில்லனாக்குவதும், போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என்று சொல்கிறவர்களை
( நிஜ ரஜினி உட்பட) ஒரு பிடி மண்ணைக்கூட அள்ள முடியாமல் செய்வதும், டிஜிட்டல் தாராவி என்கிற ஒற்றைச் சொல்லில் டிஜிட்டல் இந்தியாவைக் கிழித்துப் போடுவதிலும் பா.ரஞ்சித், துயர்தோய்ந்த மக்களின் பாசமிகு நண்பராகிறார்.
படத்தின் இறுதிக்காட்சிகளும் வில்லனின் சிங்கக்கொடியும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் புனைபெயரான கரிகாலன் எனும் பெயரும், கரிகாலனைக் காக்க உயிரையும் விடுகிற தளபதிகளும், நீங்கள் ஒருத்தர்தான் குறி கொஞ்சம் மறைந்திருங்கள் என்று ஹீமோ குரோஷி சொல்லும் சொல்லும் முள்ளிவாய்க்கால் துயரங்களைக் கண்முன் நிறுத்துகின்றன.
ஓர் இனத்தின் துயர்மிகு அழிவைக் காட்சிப்படுத்தி, ஆனாலும் அங்குள்ள ஒவ்வொருவரும் கரிகாலன் தான், அவர்களிடமிருந்து மண்ணை அபகரிக்க நினைப்பவர்கள் கரி பூசிக்கொண்டு போகவேண்டியதுதான் என்பதைச் சொல்லியிருக்கும் பா.ரஞ்சித் பாராட்டுக்குரியவர்.











