November 20, 2026
விமர்சனம்

சத்தியவான் சாவித்ரி – திரைப்பட விமர்சனம்

எமனிடம் போராடி இறந்த கணவன் சத்தியவானின் உயிரை மீட்டவர் சாவித்திரி என்பது புராணக்கதை.அந்த சத்தியவான் சாவித்திரி பெயரில் வந்திருக்கும் இந்தப்படத்தில் குற்றவாளியாகக் கூண்டில் நிற்கும் கணவனைக் காக்க வழக்குரைஞர் மனைவி போராடுகிறார் என்பது கதை.

பிரபல வழக்குரைஞர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ், சாருகேஷை திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்.
ஒரு வழக்கில், குரு மிஷ்கினுக்கு எதிராகக் களமிறங்கி வெற்றி பெறுகிறார்.இதனால் கீர்த்திசுரேஷ் மீது கொலைவெறி கொள்கிறார் மிஷ்கின்.

இந்நிலையில்,ஷில்பா மஞ்சுநாத் கொலை செய்யப்பட்ட வழக்கில் கீர்த்தி சுரேஷின் கணவர் சாருகேஷ் கைது செய்யப்படுகிறார்.குற்றமற்றவரான தன் கணவரை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற கீர்த்தி சுரேஷ்,களமிறங்க,அவரைப் பழிவாங்கும் நோக்கோத்தோடு அரசு வழக்கறிஞராக களமிறங்குகிறார் மிஷ்கின்.அவரை எதிர்த்து மீண்டும் வெற்றி பெற்றாரா? கணவரைக் காப்பாற்றினாரா? என்ன நடந்தது? ஆகிய கேள்விகளுக்கான விடைகள்தாம் படம்.

கதையின் நாயகி கீர்த்திசுரேஷ்,தான் ஒரு நல்ல நடிகை என்பதை இந்தப்படத்தின் மூலமும் நிரூபித்திருக்கிறார்.தொழில்நேர்த்தி,குடும்பவாழ்வுக்காக தொழிலையையே கைவிடும் பாங்கு,கணவனைக் காக்கப் போரிடும் வீரம் ஆகிய எல்லா இடங்களிலும் முத்திரை பதித்திருக்கிறார்.

மூத்த வழக்குரைஞராக நடித்திருக்கும் மிஷ்கின்,தன் உடல்மொழியிலேயே உருட்டி மிரட்டியிருக்கிறார்.தன் சீடரிடமே தோற்கும் மனநிலையை நடிப்பில் சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

கீர்த்தி சுரேஷின் கணவராக நடித்திருக்கும் சாருகேஷ்,வழக்குரைஞரின் கீர்த்தி சுரேஷின் மூத்தவராகவும், பிறகு அவரது உதவியாளராகவும் பயணிக்கும் பாலசரவணன்,கொலை செய்யப்படும் ஷில்பா மஞ்சுநாத் மற்றும் பிரிகிடா சாகா, தீபா சங்கர், மதுசூதன் ராவ், மாலா பார்வதி, ஏ.வெங்கடேஷ், ஆர்.சுந்தராஜன் ஆகிய அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

நீதிமன்றக் காட்சிகள் அதிகம் நிறைந்த படத்தை சலிப்பின்றிப் பார்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட்.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை மூலம் முக்கிய காட்சிகளை மேலும் முக்கியமாக்கியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே,எந்த இடத்திலும் படம் தொய்வாகிவிடக்கூடாது என்று கவனம் காட்டியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் பிரவீன் எஸ்.விஜய்.குருவை வெல்லும் சீடர்,சீடரைத் தோற்கடிக்கத் துடிக்கும் குரு,கணவனைக் காப்பாற்றப் போராடும் மனைவி ஆகிய கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு எல்லோரும் எதிர்பார்க்கும் கதையில் ஒரு திடுக்கிடும் திருப்பத்தைக் கொடுத்து புதியதாக்கியிருக்கிறார்.

– இளையவன்

Related Posts