November 7, 2026
Uncategorized

சீன் – திரைப்பட விமர்சனம்

நகரத்தில் தொடர் கொலைகள் நடக்கின்றன.அதுகுறித்த புலனாய்வில் காவல்துறை அதிகாரி சூர்யா இறங்குகிறார் என்கிற ஒற்றைவரிக் கதைக்குள் திடுக்கிட வைக்கும் திருப்பங்களைச் சேர்த்து வேறுபடுத்திக் காட்டியிருக்கும் படம் சீன்.

ஆக்ரோசமான காவலதிகாரியாக சூர்யாவைப் பார்த்திருக்கிறோம்.அரைக்கால் டவுசர் போட்டுக் கொண்டு அலட்டல் செய்யும் மாறுபட்ட காவலதிகாரியாக வருகிறார்.இதிலும் நான் குறைந்தவனில்லை என்று நிறுவுகிறார்.பார்வையற்றவராக நடிக்கும்போது அதற்கு நூறுவிழுக்காடு நியாயம் செய்யும் உடல்மொழி,நடிப்பு ஆகியனவற்றை வெளிப்படுத்தி வியக்க வைத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் நஸ்ரியா கொஞ்சம் கொழுக் மொழுக் என்று ஆகியிருந்தாலும்,படபடக்கும் கண்கள்,துறுதுறு நடை உடை ஆகியனவற்றில் மாற்றமில்லை.சூர்யாவை காதலுடன் அவர் பார்க்கும்போது திரையரங்கம் சூடாகிறது.

எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கும் நஸ்லன்,பொருத்தமாக நடித்திருக்கிறார்.சின்னச் சின்ன அசைவுகள் மற்றும் பார்வைகளால் அந்த வேடத்தைப் பெரிதாக்குகிறார்.

சூர்யாவின் அப்பாவாக நடித்திருக்கும் ஆனந்தராஜ் வரும் காட்சிகள் அதகளம்.காவல்துறை உயரதிகாரியாக நடித்திருக்கும் லால்,காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் ராஜ்பிரியன்,இன்னொரு ஆய்வாளராக நடித்திருக்கும் சுரேஷ் மதிழயகன், நஸ்ரியாவின் அப்பாவாக நடித்திருக்கும் கஜராஜ் ஆகிய அனைவரும் நன்றாக நடித்து படத்துக்குப் பலமாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் வினித் அகஸ்டியன்,பார்வையற்றவரின் பார்வையில் காட்சிகளைக் கொடுக்க மெனக்கெட்டிருக்கிறார்.காட்சிகளின் தன்மைக்கேற்ற ஒளியமைப்புகளும் கவனிக்க வைக்கின்றன.

சுசீன் ஷாமின் இசையில் பாடல்கள் நன்று.பின்னணி இசையால் படத்தைப் பன்மடங்கு உயர்த்திப் பிடித்திருக்கிறார்.

அஜ்மல் சாபு படத்தொகுப்பு செய்திருக்கிறார்.முதல்பாதியில் சில தொய்வுகள் இருந்தாலும் போகப்போக வேகம் பிடிக்கும் படம் கடைசிவரை அதே வேகத்தோடு பயணிக்கிறது.

திகில் மற்றும் புலனாய்வுப் படமா? அது இப்படித்தான் இருக்கும் இப்படித்தான் போகும் என்கிற இரசிகர்களின் எண்ணத்தைப் பொய்யாக்கும் விதமாக திரைக்கதை அமைத்து காட்சிகளையும் வைத்திருக்கிறார் இயக்குநர் ஜித்துமாதவன்.

கண்பார்வையற்றவர் என்றாலும் காவலதிகாரிகளுக்குரிய மிடுக்கு சற்றும் குறையாமல் சூர்யாவின் வேடத்தை எழுதியிருக்கிறார்.இதுபோன்ற படங்களில் கொலையாளி யார்? எதற்காக கொலைகள் செய்கிறார்? என்பதுதான் மிக முக்கியமானதாகவும் அடிப்படையானதாகவும் இருக்கும்.அதனால் அதை கடைசிவரை வெளிப்படுத்தாமல் பொத்திப் பொத்திப் பாதுகாத்து வைத்திருப்பார்கள்.அப்போதுதான் விறுவிறுப்பு குறையாமல் படம் பார்ப்பார்கள்.இவரோ,அந்த விசயத்தைத் தொடக்கத்திலேயே வெளிப்படுத்திவிட்டும் கடைசிவரை எதிர்பார்ப்புடன் படத்தை நகர்த்திச் சென்றிருக்கும் புத்திசாலித்தனம் வரவேற்புக்குரியது.

– இளையவன்

Related Posts