Uncategorized

ஏ.ஆர்.முருகதாஸுக்கு மிரட்டல் ரஜினிக்குக் கேள்வி – டி.ஆர் அதிரடி

தர்பார் படத்தால் ஏற்பட்ட நட்டத்துக்கு ஈடு கேட்டு கடந்த பல நாட்களாக விநியோகஸ்தர்கள் போராடிவருகின்றனர்.

இது தொடர்பாக ரஜினிகாந்தையும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸையும் சந்திக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. அதோடு விநியோகஸ்தர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்நிலையில், சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர் சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-…..

ரஜினிகாந்த் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி லைகா நிறுவனம் தயாரித்த ‘தர்பார்’ படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக வினியோகஸ்தர்கள் லைகா நிறுவனத்தை அணுகியபோது, ‘எங்களுக்குச் செலவு அதிகமாகி விட்டது.நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் முருகதாஸ் ஆகியோர் அதிகச் சம்பளம் வாங்கியிருக்கிறார்கள். அவர்களிடம் போய்க் கேளுங்கள்’, என்று பதிலளித்து இருக்கிறார்கள்.

அதைத்தொடர்ந்து நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் கோரிக்கை மனு கொடுப்பதற்காக ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் மீது ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த புகாரின்பேரில் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது நியாயமல்ல. மனு கொடுக்கச் சென்ற விநியோகஸ்தர்கள் எந்தத் தகராறும் செய்யவில்லை. அவர்கள் மீது கொலைமுயற்சி புகார் கொடுத்திருப்பது தர்மம் அல்ல.

ஏ.ஆர்.முருகதாஸ் தொடர்ந்து படங்களை இயக்கவேண்டும். அவர் இயக்கிய படங்களை விநியோகஸ்தர்கள் திரைக்குக் கொண்டுவர வேண்டும். இதை அவர் ஞாபகத்தில் வைத்துக்கொள்வது நல்லது. அவருக்கு இயக்குநர் சங்கம் இருப்பதுபோல, எங்களுக்கும் சங்கங்கள் இருக்கின்றன.

விநியோகஸ்தர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆகிய முத்தரப்பினரையும் கூட்டி விநியோகஸ்தர்களுக்காகப் போராட்டம் நடத்த முடியும். இதை ஏ.ஆர்.முருகதாஸ் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

விநியோகஸ்தர்கள் மீது காவல்நிலையத்தில் முருகதாஸ் புகார் அளித்துள்ளது வருத்தம் அளிக்கிறது. இயக்குநர் முருகதாஸ் தாமாக முன்வந்து வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற டிராஜேந்தர்,

நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களைக் காப்பாற்றாதவர் எப்படி தமிழகத்தை காப்பாற்றுவார் என நடிகர் ரஜினிகாந்துக்கும் கேள்வி எழுப்பினார்.

Related Posts