கான்சிட்டி இயக்குநர் படத்தில் சந்தானம் – விவரம்
நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி இதுவரை இருபது படங்கள் நடித்துமுடித்துவிட்டார்.தொடக்கத்தில் அவருடைய படங்கள் வெற்றி பெற்றன.ஆனால்,கடந்த சில படங்கள் வெற்றி பெறவில்லை.
அதனால்,மீண்டும் பெரிய கதாநாயகர்களுடன் நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் முடிவை எடுத்தார்.
சிம்புவுடன் ஒருபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.படப்பிடிப்புக்குப் போகிற நேரத்தில் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்தப்படம் நடக்காமல் நின்றுபோனது.
ஆர்யாவுடன் ஒருபடத்தில் இணைந்து நடிப்பதென முடிவாகிவிட்டதெனினும் அதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை.
ஜெயிலர் 2 படத்தில் அவர் நடித்ததாகவும் படத்தின் நீளம் கருதி அவர் நடித்த பகுதிகள் நீக்கப்பட்டுவிட்டன என்றும் செய்திகள் வருகின்றன.
இதனால்,நல்லதோ கெட்டதோ தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பது என்கிற முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதனால்,கதாநாயகனாக நடிப்பது,தயாரிப்பு நிறுவனம் அல்லது இயக்குநர் என ஏதாவதொரு விசயம் நம்பிக்கைக்குரியதாக இருந்தால் உடனே ஒப்புக்கொள்வது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
அதன்படி,இப்போது, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘லவ் பைட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதனை ‘காஞ்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தின் இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார்.
அதைத்தொடர்ந்து,சுதாமன் கிருஷ்ணா எழுத்து மற்றும் இயக்கத்தில் சந்தானம் நடிக்கிறார்.அந்தப்படத்திற்கு அதிசய பிறவி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் மற்றும் கே7 ஸ்டூடியோஸ் சார்பில் கே.ஜே.கணேஷ், விஜய் கே செல்லையா ஆகியோர் அந்தப்படத்தைத் தயாரித்திருக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தில் கோபிகா ரமேஷ், ஜென்சன் திவாகர், ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், பாடல்கள் உள்ளிட்ட பிற பதிவேற்றங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு படங்களும் நிச்சயமாக நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெறும் என்பது அவருடைய நம்பிக்கை.
இவ்விரு படங்களைத் தொடர்ந்து இன்னொரு புதியபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அந்தப்படத்தை அண்மையில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்த கான்சிட்டி படத்தை இயக்கிய ஹரீஷ்துரைராஜ் இயக்குகிறார்.
இயக்குநர் ஹரீஷ்துரைராஜ்,முதல்படத்தை எழுதி இயக்கியதோடு தயாரிக்கவும் செய்திருந்தார்.இயக்குநர் தயாரிப்பாளர் ஆகிய இரு அவதாரங்களிலும் அவர் வெற்றிபெற்றார் என்பது கவனம் ஈர்த்த தகவல்.
இந்தக் காரணத்துக்காகவும்,அவர் சொன்ன கதை பிடித்திருந்ததாலும் அவர் படத்தில் நடிக்க சந்தானம் ஒப்புக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.











