சிக்கலில் ஜீவாவின் கீ படம் – டிடிவி.தினகரன் தலையீடு
புதிய இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் கீ.2016 ஆம் ஆண்டு நடுவில் தொடங்கப்பட்ட இப்படத்தில் நிக்கி கல்ரானி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்பக் குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தைத் தயாரித்திருப்பவர் மைக்கேல் ராயப்பன். இவர் சிம்புவை வைத்து எடுத்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் பெரிய நட்டத்தைச் சந்தித்தது.
அதன் காரணமாக இந்தப்படமும் சிக்கலைச் சந்தித்தது. இப்போது இந்தப்படம் மே 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும் படத்தை வெளியிட கடைசி நேரம் வரை இடையூறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதன்காரணமாக, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், டிடிவி தினகரனிடம் போய் முறையிட்டிருக்கிறார். அவர் நடந்த சிக்கல்களைக் கேட்டுக் கொண்டதோடு அதைத் தீர்க்க உதவி புரிந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் விளைவு, இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை உரிமைகளை சுக்ரா ஸ்டூடியோஸ் என்கிற நிறுவனம் பெற்றுள்ளது.இதனால் பலமுறை தள்ளி வைக்கப்பட்ட கீ இப்போது நிச்சயம் வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.
மைக்கேல் ராயப்பன் டிடிவிதினகரன் கட்சி சார்பாக திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.











