சட்டமும் நீதியும் 2 – இணையத்தொடர் விமர்சனம்
2025 ஜூலையில் ஜீ 5 இணையதளத்தில் வெளியான தொடர் சட்டமும் நீதியும்.நீதிமன்றத்திற்கு வெளியே புகார்களை எழுதிக் கொடுக்கும் வழக்குரைஞராக பலராலும் மதிக்கப்படாதவராக இருக்கும் சரவணன், ஒரு பெண் காணாமல் போன வழக்கைக் கையிலெடுக்கிறார்.அதில் பல்வேறு மர்ம முடிச்சுகள்.அவற்றை அவர் எவ்வாறு எதிர்கொண்டார்.கடைசியில் என்னவானது? என்பதைச் சொன்னது இந்தத் தொடர்.
அதன் வெற்றி காரணமாக அதன் இரண்டாம் பாகம் இப்போது வெளியாகியிருக்கிறது.
காவல்துறை ஆய்வாளர் பிரேம் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கிறார்.அவரது மரணம் கொலை வழக்காகப் பதிவு செய்யப்படுகிறது.நான்கு காவலர்கள் மீது அந்தக் கொலைக்குற்றம் சுமத்தப்படுகிறது.அந்த நான்கு காவலர்களும் அப்பாவிகள், அவர்களுக்கும் இந்தக் கொலைக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என அவர்களது குடும்பத்தினர் முறையிடுகிறார்கள்.
மரணித்த காவல்துறை ஆய்வாளரின் மனைவி வரலட்சுமி சரத்குமார்,மிகப்பெரிய வழக்குரைஞர்.கணவருக்காக அவர் வாதாடுகிறார்.அதனாலேயே குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக வாதாட எந்த வழக்குரைஞரும் முன்வரவில்லை.
இந்நிலையில்,பிறரால் மதிக்கப்படாத சரவணன்,நான்கு காவலர்களுக்கு ஆதரவாக வழக்கு நடத்த முன்வருகிறார்.பல்வேறு பலமிக்க வரலட்சுமியும் பலவீனமாக அறியப்படும் சரவணனும் மோதுகிறார்கள்.இந்த வழக்கில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறது இந்தத் தொடர்.
முதல்பாகத்தைப் போலவே இதிலும் பலவீனமான வழக்குரைஞர் வேடமேற்றிருக்கும் சரவணன்,தன் நடிப்புத் திறமையால் பலம் பொருந்தியவர் என்பதை நிறுவுகிறார்.இயக்குநர் அமைத்திருக்கும் காட்சிகள் மற்றும் வசனங்கள் எண்ணியது எண்ணியபடியே பார்வையாளர்களைச் சென்று சேர சரவணன் காரணமாக இருக்கிறார்.அதனால் பாராட்டுப் பெறுகிறார்.
பலம்பொருந்திய வழக்குரைஞராக திடமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் வரலட்சுமி,அதற்கு நூறுவிழுக்காடு பொருத்தமாக இருக்கிறார்.வழக்கின் போக்கை தன் முகபாவங்களிலேயே வெளிப்படுத்திவிடுகிறார்.
வரலட்சுமி சரத்குமாரின் கணவராக நடித்திருக்கும் பிரேம்குமார், சரவணனின் உதவியாளராக நடித்திருக்கும் லாவண்யா, குற்றம் சாட்டப்படும் காவலர்களாக நடித்திருக்கும் கவிதாபாரதி,ஆறு பாலா,கல்லூரி வினோத் ஆகியோர் பொருத்தமான தேர்வு.சரியாக நடித்து தொடருக்குப் பலமாக இருக்கிறார்கள்.
பெரும்பாலும் நீதிமன்றக் காட்சிகள்தாம் எனினும் ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுலகிருஷ்ணனின் உழைப்பு, சோர்வடைய வைக்காமல் சுவாரசியமாகப் பார்க்க வைத்திருக்கிறது.
விபின் பாஸ்கரின் பின்னணி இசை,இன்னொரு முக்கிய கதாபாத்திரமாகவே மாறி,எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் மட்டுமின்றி காட்சிகளுக்கும் பலமூட்டியிருக்கிறது.
தொடரைத் தொகுத்திருக்கும் ஆதிஸ்வரன்.ஆர்,ஒரு பகுதி முடிந்தவுடன் அடுத்தபகுதியை உடனே பார்த்துவிட வேண்டும் என்று ஆர்வம் ஏற்படுகிற வகையில் தொகுத்திருக்கிறார்.
திரைக்கதை எழுதியிருக்கும் பாலாஜி செல்வராஜ் மற்றும் பிரதீப் மரியான் ஆகியோர்,வீட்டில் பார்த்தாலும் விடாமல் பார்க்க வைக்க வேண்டுமென மெனக்கெட்டிருக்கிறார்கள்.
பாலாஜி செல்வராஜ் இயக்கியிருக்கிறார்.காவல்துறை ஆய்வாளர் மரணத்தை வைத்துக் கொண்டு,பல்வேறு மனித உணர்வுகள்,போராட்டங்கள் ஆகியனவற்றை சுவையாக வெளிப்படுத்தி வியக்க வைத்திருக்கிறார்.
– இளையவன்
குறிப்பு – இத்தொடர் அக்டோபர் 23 முதல் ஜீ 5 இணையதளத்தில் காணக்கிடைக்கிறது.











