பத்தா – திரைப்பட விமர்சனம்
1980 களில் கைபேசி இல்லாத காலகட்டத்தில் நடக்கும் கதை.இப்போதென்றால் இந்தக்கதையைப் படமாக்கவே முடியாது.அடிதடி,வெட்டுகுத்து,கள்ளச்சாராயம் காய்ச்சுதல் எனும் எல்லா சமூகவிரோதச் செயல்களையும் செய்துகொண்டிருக்கும் ஒரு முரடனுக்கும்,ஒரு பள்ளிச்சிறுவனுக்கும் இடையே நடக்கும் சுவையான கதைதான் பத்தா.நாயகன் விஜய்சேதுபதியின் பெயர் பக்தவத்சலம்.அதன் சுருக்கம்தான் பத்தா.
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனித்தன்மையைக் காட்டி மேலும் சிறப்பாக்கும் விஜய்சேதுபதி,இந்தப்படத்திலும் அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.ஒரு மாபெரும் ரவுடி யாரும் எதிர்பாராமல் இப்படி ஒரு சிக்கலில் சிக்கினால் எப்படி நிலைகுலைந்து போவான் என்பதை தன் நடிப்பால் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.அவருடைய தோற்றமாற்றம்,தொடக்கத்தில் ஒட்டாமல் தெரிந்தாலும் போகப்போக பழகிவிடுகிறது.
விஜய்சேதுபதியின் மனைவியாக நடித்திருக்கும் லிஜோமோல்ஜோஸின் பாந்தமும் பணிவும் இரசிக்க வைக்கின்றன.
விஜய்சேதுபதியுடன் மோதும் சிறுவனாக நடித்திருக்கும் சாய்பிரித்விராஜ்,அவருக்கு இணையாக நடித்து பெரும் வரவேற்பைப் பெறுகிறான்.
விஜய்சேதுபதியின் மகளாக நடித்திருக்கும் சஹஸ்ரா,சிறுவனின் அம்மாவாக நடிக்கும் சாந்தி பாலச்சந்திரன்,அப்பாவாக நடிக்கும் ஹரி கிருஷ்ணன் ஆகியோரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.கே.செல்வகுமார் திரைக்கதையில் இருக்கும் சுவாரசியத்தை காட்சிகளிலும் காட்டியிருக்கிறார்.முக்கியமான காட்சிகள் குறுகிய இடத்தில் நடந்தாலும் அவற்றை நிறைவாகக்க்கியிருக்கிறார்.
சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை,கதாபாத்திரங்களின் தன்மைகளை மென்மேலும் உயர்த்திப் பிடித்திருக்கிறது.
ஆர்.கலைவாணனின் படத்தொகுப்பு படத்தை சலிப்பின்றி கொண்டு செல்லப் பயன்பட்டிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி தரணிதரன்.எல்லாப் படங்களும் அடிப்படையில் ஒரேமாதிரியான கதைகளைக் கொண்டிருக்கின்றன என்கிற விமர்சனம் கொஞ்சமும் வந்துவிடாதபடி ஒரு திரைக்கதையை எழுதியிருக்கிறார்.
ஊருக்குள் இருக்கும் உண்மைகள் சிறுவர்கள் உலகில் எப்படியெல்லாம் பேருருவகமாகின்றன என்கிற கற்பனை மிகமிக இரசிக்கத்தக்கதாக இருக்கிறது.நானென்கிற ஆணவத்தில் ஆடுகிறவர்களின் நிலை திடுமென தலைகீழாக மாறலாம் என்பதும் அதன்பின் அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதும் எழுத்தில் மட்டுமின்றி காட்சிகளிலும் நன்றாக வெளிப்பட்டிருக்கின்றன.
சிறுவனுக்கும் விஜய்சேதுபதிக்குமான உரையாடலும் பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கிறது.
நல்ல கற்பனை செய்த இயக்குநர் பாலாஜி தரணிதரனுக்கு,அதைச் சரியாக வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரங்கள்,அதற்குப் பொருத்தமான நடிகர் நடிகையர் என எல்லாமும் கனகச்சிதமாக அமைந்து அவருக்கும் நாயகனுக்கும் மட்டுமின்றி பங்குபெற்ற எல்லோருக்கும் பெருமை தரக்கூடிய படமாக இருக்கிறது.
– கதிரோன்











