September 28, 2026
செய்திக் குறிப்புகள்

ஒரு வரிக்கதை சொல்லி ராஜமெளலியை மயக்கிய இயக்குநர் – விவரம்

ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் – அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) – ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா – எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி (sakthi film factory) நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார்.

இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் வெளியீட்டிற்கு முன்னரான பிரத்யேக நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திரவிடுதியில் செப்டம்பர் 27 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் எஸ்.எஸ்.ராஜமௌலி,எஸ்.எஸ்.கார்த்திகேயா,ஃபஹத் பாசில்,சாரா சச்தேவ்,பிரவீண் ஆண்டனி,விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகிய படக்குழுவினருடன் நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்….

ஹாலிவுட்டில் பிரம்மாண்டத்தைக் காண்பிக்க வேண்டும் என்றால்,அவர்களுக்கு பெரிய பெரிய டைனோசர்கள் தேவைப்பட்டது.ஆனால் எங்கள் ஊரில் இருந்து ‘ஈ’யை வைத்து உலகம் முழுவதும் பிரம்மாண்டத்தை காண்பித்தவர் எங்கள் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. எங்களுக்கெல்லாம் பிரம்மாண்டம் என்றால் ஹாலிவுட்தான் என்றிருக்கும் போது அது இல்லை என்று எங்களை நம்ப வைத்த இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் முத்திரையில் வெளியாகும் ஒரு திரைப்படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’.இதைக்கடந்து இந்தப்படத்தைப் பற்றி நாங்கள் எல்லாம் என்ன சொல்லிவிடப் போகிறோம்?.
இந்தப்படத்தை தமிழகம் முழுவதும் விநியோகிக்கும் பொறுப்பை எங்கள் நிறுவனத்திற்கு அளித்ததை பெருமையாகக் கருதுகிறேன்.இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் எஸ்.எஸ்.கார்த்திகேயாவிற்கு நன்றி.
இப்படத்தின் டீசர் வெளியாகும் போது எஸ்.எஸ்.ராஜமௌலி வழங்கும் படத்தில் ஃபஹத்பாசில் நடித்திருக்கிறார் என்பது தெரியவந்தது. அதன்பிறகு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் என்னுடைய நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து இரசிக்க வேண்டிய படம் என்ற ஒரு பேச்சு எழுந்தது.இது எங்களுக்கு சந்தோசத்தை அளித்திருக்கிறது.
தயாரிப்பாளர் கார்த்திகேயாவிடம் இந்தப்படம் 3 D தொழில்நுட்பத்தில் வந்திருக்க வேண்டிய திரைப்படம்,2 D தொழில்நுட்பத்தில் வெளியிட்டிருக்கிறீர்கள்.இப்படத்தை ரீ ரிலீஸ் செய்யும்போது 3 D தொழில்நுட்பத்தில் வெளியிட்டால்,கூடுதலான வரவேற்பு கிடைக்கும் என்றேன்.
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அடுத்த ஜெனரேஷனுக்கான இன்ஸ்பிரேஷனாகத் திகழ்கிறார்.இங்கு ஃபஹத் பாசிலுக்கென மிகப் பெரிய இரசிகர் கூட்டமும் இருக்கிறது.இந்தப்படத்தை பார்ப்பதற்கு குடும்ப இரசிகர்களும் இணைவார்கள் என்பதால் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை அளித்திருக்கிறது என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.எஸ்.கார்த்திகேயா பேசுகையில்….

சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் சூர்யாவிற்கு நன்றி.இது எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான முதல் திரைப்படம்.இந்தப்படம் நேர்மையான இனிமையான திரைப்படம்.எஸ்.எஸ்.ராஜமவுலி வழங்கும் என்றால,இந்தப்படத்தின் பட்ஜெட்டை விட,அவருடைய படங்களில் உள்ளதைப் போன்ற எமோஷனை சொல்லும் படம் என்று குறிப்பிடலாம்.அது உங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.இப்படத்தின் இரண்டாம்பாதியில் இடம் பிடித்திருக்கும் எமோஷனல் உங்கள் அனைவரையும் கவரும்.இயக்குநர் ஷஷாங்க் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.
நான் ஃபஹத்பாசில் மிகப்பெரிய இரசிகன்.பேபி சாரா இப்படத்தில் மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறார்.அக்டோபர் 2 ஆம் தேதி ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.அனைவரும் குடும்பத்தினருடன் வருகை தந்து படத்தை பார்த்து இரசித்து ஆதரவு தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

படத்தொகுப்பாளர் பிரவீண் ஆண்டனி பேசுகையில்….

ஆர்ஆர்ஆர் படத்தின் ட்ரெய்லருக்காக இந்தக்குழுவை முதன்முதலில் சந்தித்தேன்.அப்போதுதான் எஸ்எஸ் ராஜமௌலி மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயாவை சந்தித்தேன்.நான் தயாரிப்பாளர் கார்த்திகேயாவை சகோதரர் என்றுதான் அழைப்பேன்.அந்தத்தருணத்திலிருந்து என் மீது மிகப்பெரிய நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.அதனால்தான் இப்படத்தின் படத்தொகுப்புப் பணியை எனக்கு வழங்கினார்கள்.
என் மீதான நம்பிக்கை இருக்கிறது என்றால்,நான் செய்யும் அனைத்தையும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.இப்படத்தின் ட்ரெய்லருக்கு எத்தனை வெர்ஷன் உருவாக்கினோம் என்று தெரியாது.ஒருவகையில் எடிட் செய்தால் நன்றாக இருக்கிறது,ஆனால் முதல்பகுதி சற்று மாற்றலாம் என்பார்.அதை மாற்றிக் கொடுத்தால்,முதல் பகுதி ஓகே.ஆனால்,இரண்டாம்பகுதியில் சற்று மாற்றலாம் என்பார்.அதன்பிறகு இரண்டாம் பகுதியையும் மாற்றுவோம்.இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால்,எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்.ஒரு ட்ரெய்லர் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? எதை ஏற்படுத்தவேண்டும்? என்பதில் கார்த்திகேயா தெளிவாக இருப்பார்.இந்த விசயத்தை இந்தக்குழுவிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
எஸ்.எஸ்.ராஜமௌலியும் அப்படித்தான் இருப்பார்.அவருடன் இணைந்து பணியாற்றும்போது அவருடன் இணைந்து பணியாற்றுகிறோமோ என்ற ஆச்சரியம்தான் இருக்கும்.
இந்தப்படத்தின் திரைக்கதையை வாசிக்கும்போது இயக்குநர் ஷஷாங்கிடம் இந்தந்த இடங்களில் இருக்கும் விசயங்களை எப்படி காட்சிப்படுத்தப் போகிறீர்கள்? என்பதைப் பற்றிக் கேட்டேன்.பொதுவாக திரைக்கதையில் எழுதப்பட்டிருப்பதை 60 சதவீதம் காட்சிகளாக உருவாக்கப்பட்டாலே,அதுவே மிகப்பெரிய வெற்றி என்பார்கள்.ஆனால் இந்தப்படம் என்னை பொறுத்தவரை 200 சதவீதம் நேர்த்தியாக உழைத்துக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.அதாவது திரைக்கதையிலிருந்து திரைமொழியை 200 சதவீதமாக வழங்கியிருக்கிறார்கள். இயக்குநரின் பார்வை.ஒளிப்பதிவாளரின் பார்வை.அதனுடன் ஃபஹத்பாசிலின் பங்களிப்பு ஆகியவை இருப்பதால் மிகச் சிறப்பானதாக இருக்கிறது.
ஃபஹத் பாசில் சாரா இருவரும் திரையில் தோன்றும்போது இது குழந்தைகளுக்கான படம் மட்டுமல்ல அனைவருக்குமான படமாக இருக்கும்.இந்த காலாண்டுத்தேர்வு விடுமுறையில் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து இரசிக்கும் அளவில் இந்தப்படம் இருக்கிறது.இந்தப்படத்தை தமிழ் டப்பிங் படமாக மட்டும் இல்லாமல் தமிழுக்காக சிறிய சிறிய விசயங்களையும் நுட்பமாக கவனித்து உருவாக்கியிருக்கிறார்கள்.அனைவருக்கும் நன்றி என்றார்.

குழந்தை நட்சத்திரம் சாரா பேசுகையில், ‘

ஆப்ரா கா ஷாப்ரா.வணக்கம் சென்னை.சூர்யா சாருக்கு நன்றி.நான் இந்தப்படத்தில் திவ்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். திவ்யாவின் பெஸ்ட் பிரண்ட் சூரி.‌இந்தப்படத்தில் நாங்கள் அனைவரும் ஃபேண்டஸியான மேஜிக்கல் உலகத்திற்கு இரசிகர்களை வரவேற்கிறோம்.இந்தப்படத்தில் சாகசமும் இருக்கிறது.இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த தயாரிப்பாளருக்கும்,இயக்குநருக்கும் நன்றி.அனைவரும் காந்தி ஜெயந்தி தினத்தன்று படத்தைக் காண இப்படத்தின் மேஜிக்கல் உலகத்தை காண திரையரங்கத்திற்கு வருகை தாருங்கள் என்றார்.

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி பேசுகையில்….

இந்தப்படத்தின் முன்னோட்டத்திற்கு பின்னணிக்குரல் கொடுத்த ‘உலக நாயகன்’ கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய நன்றி.’கருப்பு’, ‘விஸ்வநாத் ‌& சன்ஸ்’ என டபுள் டமாக்கா வெற்றியை வழங்கிய சூர்யாவிற்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி.’சிங்கம்’படத்தின் மூலம் மாஸான போலீஸ் அதிகாரியை காட்சிப்படுத்திய நீங்கள்,’சீன்’ படத்தில் மீண்டும் ஒரு வித்தியாசமான போலீஸ் அதிகாரியை காட்சிப்படுத்தி இருப்பீர்கள் என நம்புகிறோம்.நவம்பரில் அந்தப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.அந்தப்படமும் வெற்றிபெற வாழ்த்துகள்.‌
ஒருமுறை என்னிடம் மிகப்பெரிய கட்டிடக்கலை நிபுணர் சொன்னார்.நம்முடைய நகத்தின் மேல் ஒரு கட்டிடத்தின் அவுட்லைனை வரைய முடிந்தால் அதுதான் மிகச்சிறந்த கட்டிடம் என்றார்.இது என்னைப் பொறுத்தவரை திரைப்படத்திற்கும் பொருந்தும்.இரண்டரை மணி நேர திரைப்படத்தை இரண்டு அல்லது மூன்றுவரிகள் கொண்ட கதையாக சொல்லப்பட வேண்டும்.அதுதான் சிறந்தபடம். இதைத்தான் இந்தப்படத்தின் இயக்குநர் ஷஷாங்கிடம் சொன்னேன்.
இயக்குநர் கதை சொல்வதற்காக என்னைச் சந்தித்தார்.அப்போது அவர் எனக்கு மூன்றுமணி நேரத்தைத் தாருங்கள்.இப்படத்தின் கதையைச் சொல்கிறேன் என்றார்.அவரிடம் நிச்சயமாக மூன்றுமணி நேரத்தை ஒதுக்கமுடியாது.உங்களால் ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையைச் சொல்லமுடியுமா? எனக் கேட்டேன்.அது எப்படி சாத்தியம்? எனக்கேட்டார்.ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை நீங்கள் சொன்னால் அது எனக்குப் பிடித்திருந்தால் நான் இரண்டரை மணி நேரக் கதையைக் கேட்கிறேன் என்றேன்.‌அப்போது அவர் யோசித்து எனக்கு ஐந்து நிமிடம் வேண்டாம்.ஒரே ஒரு வாக்கியத்திற்குள் இந்தக்கதையைச் சொல்கிறேன் என்றார்.
ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.இந்த ஒற்றை வாக்கியத்தில்,இதில் இருக்கும் எல்லா விசயங்களும் என் மனதில் ஓடியது.அதனால் இந்தக்கதை மிகவும் அருமையாக இருந்தது.அதன்பிறகு இந்தப்படத்தின் பணிகள் தொடங்கியது.
ஃபஹத் பாசில் ஒரு சிறந்த நடிகர் என்று அனைவருக்கும் தெரியும்.அவர்’கும்பளாங்கி நைட்ஸ்’,’ஜோஷி’,’ட்ரான்ஸ்’என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.அவர் எப்படி,இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார் என்பது இன்றுவரை எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.அவர் தொடர்ந்து டார்க் ஷேடுள்ள கேரக்டர்களில் நடிக்கிறார் என வியப்பாகவே இருக்கும்.இந்தப்படத்திலும் அவர் நடித்திருப்பது சிறப்பு.
மீண்டும் சொல்லவேண்டும் என்றால் இந்தப்படத்தின் ராஸ்கல் அவர்தான்.சூரி கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்.இந்தப்படத்தின் முதல்பிரதியை டப்பிங் இல்லாமல் இசை இல்லாமல் பார்க்கும்போது நான் அழுதேன்.சிரித்தேன்.அந்த அளவிற்கு என்னை இந்தப்படம் கவர்ந்தது.அந்த அளவிற்கு அந்த சூரி கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்து நடித்திருக்கிறார்.இதற்காக அவருக்கு நன்றி.
படத்தில் சூரி கதாபாத்திரத்தை ஓட ஓட விரட்டுவது திவ்யா.அந்த கதாபாத்திரத்தில் சாரா நடித்திருக்கிறார்.மிக அற்புதமாக நடித்திருக்கிறார்.திரையில் சூரி என் பெஸ்ட் பிரண்ட் என்று சொன்னாலும் படப்பிடிப்புதளங்களில் இருவரும் நடிக்கும்போது எதிரிகளாகவே இருந்திருப்பார்கள்.ஒருவரை ஒருவர் மிஞ்சி சிறப்பாக நடிக்கவேண்டும் என்று போட்டி இருந்திருக்கும்.இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு உரையாடலுக்கும் ஒவ்வொரு சிறு சிறு நடிப்பிற்கும் சூரிக்கு,திவ்யா சரியான போட்டியாளராக இருப்பார்.இந்தப்போட்டி இரசிகர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்.
எடிட்டர் பிரவீன் சொன்னதுபோல் இந்தப்படம் பேத்தி முதல் பாட்டி வரை குடும்பத்தில் உள்ள அனைவருக்குமானது.அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.அனைவரும் குடும்பத்தினருடன் வருகை தந்து இந்தப்படம் தரும் மேஜிக்கல் எக்ஸ்பீரியன்ஸ் அனுபவியுங்கள்.
இந்தப் படத்தின் தெலுங்கு முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த நடிகர் பாலகிருஷ்ணாவிற்கும்,தமிழில் பின்னணி குரல் கொடுத்த’உலகநாயகன்’கமல்ஹாசனுக்கும்,மலையாள மொழியில் பின்னணி குரல் கொடுத்த நடிகர் மோகன்லாலுக்கும் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் பேசுகையில்….

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என பகத்பாஸில் இரண்டுநாள் முன்னதாக அழைப்பு விடுத்தார்.அவர் நடிக்கும் திரைப்படத்தை நிறைவு செய்து இருக்கிறேன்.இயக்குநர் ராஜமவுலி சொன்னதைபோல் நான் அந்தப்படத்தைப் பற்றிப் பேசினால் அதுதான் செய்தியாகும். அதனால் அதைப்பற்றி தற்போது பேசமாட்டேன்.‌இந்தப்படத்தின் டிரைலரை ஃபஹத்பாசில் எனக்குக் காண்பித்தார்.பார்த்துவிட்டு மிகச்சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டினேன்.இந்தப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகிறது.அனைவரும் ஆதரவு தரவேண்டும். இந்தப்படம் நிச்சயமாக பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறும் என்றார்.

நடிகர் ஃபஹத் பாசில் பேசுகையில்….

இந்தக்கதையைக் கேட்ட தருணத்திலிருந்து எனக்குள் இரண்டு விசயங்கள் மட்டும்தான் எப்போதும் நினைவில் இருக்கிறது.அதைமட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
தயாரிப்பாளர் கார்த்திகேயா எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.அதில்,இரண்டு கதைகளை மட்டும் அனுப்பியிருக்கிறேன்.‌இந்த இரண்டில் எந்தக்கதையை நீங்கள் தேர்வு செய்தாலும் எங்களுக்கு ஓகே என குறிப்பிட்டிருந்தார்.அதன்பிறகு அவரைச் சந்தித்தேன். இரண்டு கதைகளையும் கேட்டேன்.இரண்டு கதைகளும் பிடித்திருந்தது.இரண்டு கதைகளிலும் நடிக்கிறேன் என்றேன்.அப்போதுதான் அவர்,நான் தான் தயாரிக்கிறேன் என்றார்.அது எனக்கு சந்தோசமாக இருந்தது.அதன்பிறகு ஒரு விசயம் சொன்னார்.இந்தப்படத்தை ராஜமௌலிதான் வழங்குகிறார் என்றார்.அப்படிச் சொன்னவுடன் என்னைவிட வேறு சிறந்த நடிகர்களை வைத்துத் தயாரிக்கலாமே? எனக்கேட்டேன்.
இதுவரை எனக்கு தெலுங்கில் நல்லதொரு ஓபனிங் இருந்ததில்லை என நினைக்கிறேன்.இந்தப்படம் அதனை மாற்றும் என்று நம்புகிறேன்.இதற்காக தயாரிப்பாளருக்கும் ராஜமௌலிக்கும் நன்றி.
தயாரிப்பாளர் கார்த்திகேயா இப்படத்தின் நிகழ்விற்கு சூர்யா வருகை தருகிறார் என்று சொன்னார்.அதைக் கேட்டவுடன் எனக்கு இன்னும் மகிழ்ச்சி அதிகமாகியது.ஏனென்றால் அவர் எனக்கு சகோதரர்.அவர் இன்று இங்கு வருகை தந்ததற்கும்,வாழ்த்துவதற்கும் நன்றி.
நான் இதுவரை இப்படி ஒரு கதையைக் கேட்டதும் இல்லை,இப்படி ஒரு படத்தைப் பார்த்ததும் இல்லை.இப்படி ஒரு கதாபாத்திரத்திலும் நான் நடித்ததில்லை.இது மிகவும் புதிது.அதனால்தான் இதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தேன்.நாங்கள் இந்தப்படத்திற்காக 100,120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.இப்படத்தினை அண்மையில் பார்த்தபோது வியந்தேன்.படத்தில் பணியாற்றிய இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி,ஒளிப்பதிவாளர் பிராட் பிரான்சிஸ்,தயாரிப்பு வடிவமைப்பாளர் சந்தீப்,மோகன்,இசையமைப்பாளர் காலா பைரவா, படத்தொகுப்பாளர் பிரவீண் ஆண்டனி ஆகிய அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் எஸ் எஸ் கார்த்திகேயாவிற்கு நன்றி.ஹைதராபாத்தில் ஒரு அரங்கத்தில்’டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்.அடுத்த அரங்கத்தில்’வாரணாசி’படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்.இரண்டிற்கும் அவர்தான் தயாரிப்பாளர்.ஆனால் அவர் எப்போதும் எங்கள் படக்குழுவுடன்தான் இருப்பார்.அதற்காக அவருக்கு நன்றி.
என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்திய குழந்தை என்றால் அது சாரா தான்.படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது ஒரு காட்சியில் என்னிடம் இப்படி பேசலாமே என என்னுடைய வசனத்தையும் அவள் சொல்லிக் காட்டுவாள்.என்னுடன் இவ்வளவு அர்ப்பணிப்புடன் இணைந்து பணியாற்றிய சகநடிகர்கள் யாருமில்லை என்று சொல்லலாம்.அந்த அளவிற்கு அற்புதமான சகநடிகைதான் சாரா.நாங்கள் இருவரும் இணைந்து இந்தப்படத்தில் அற்புதமான மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறோம்.நாங்கள் இருவரும் இணைந்து இந்தப்படத்தை அனைவரும் அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்கில் காணவேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.மிகவும் சிறப்பான படம்.‌இந்தப்படத்தை நீங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் விருப்பத்திற்குரியவர்களுடனும் பார்க்கலாம்.இந்தப்படம் உங்களை சிரிக்க வைக்கும்,அழவைக்கும்,அந்த அளவிற்கு அழகான அற்புதமான படம் என்றார்.

நடிகர் சூர்யா பேசுகையில்….

இந்த மாலைப்பொழுதில் ‘டோன்ட் டிரபுள் தி டிரபுள்’ படக் குழுவினருடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
விருந்தோம்பல் என்றொரு வார்த்தை இருக்கிறது.விருந்தோம்பலை இங்கு நாம்தான் சிறப்பாகப் போற்றுகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.ஆனால் ஆந்திராவிலும்,தெலுங்கானாவிலும் நம்மைவிட மிகச்சிறப்பாக விருந்தோம்பலை மேற்கொள்கிறார்கள். அவர்களைப் போல் நம்மால் விருந்தோம்பலை கடைபிடிக்க முடியாது.அந்த அளவிற்கு நம் மீது அவர்கள் நிபந்தனையற்ற அன்பை செலுத்துவார்கள்.
சினிமா என்பது என்னைப் பொறுத்தவரை நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கும்.நாம் பிறந்ததிலிருந்து சினிமாவை பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.எனக்கு தற்போது ஐம்பது வயதாகிவிட்டது.ஒவ்வொரு சினிமாவும் புதுப்புது படங்கள்.புதுப்புது முயற்சிகள் என நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது.அதைப்போலத்தான்,நான் இந்தத் திரைப்படத்தையும் பார்க்கிறேன்.யாரும் எதிர்பார்க்காத ஒரு காம்பினேஷன்.ஃபஹத் பாசில் – ராஜமௌலி – கார்த்திகேயா- கூட்டணியில் இப்படி ஒரு திரைப்படம் உருவாகும் என நாம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.இப்படி ஒரு ட்ரெய்லர்.அதில் இப்படி ஒரு கதை.ஒருவர் ஒரு பேயைக் கடத்திவிட முடியுமா? என கற்பனை செய்யமுடியாத ஒரு விசயம்தான் கதை.கடத்திவிட்டால் என்ன ஆகும்? என்பதை யாராலும் எதிர்பார்க்க முடியாது.அதனால்தான்,நான் இந்தப்படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பகத் என்னை அண்ணன் என்று அழைத்துவிட்டார்.சந்தோசம்.நாங்கள் இருவரும் நிறைய பேசியிருக்கிறோம்.காலை,மாலை,மதியம், இரவு,நடு இரவு என பல தருணங்களில் பேசியிருக்கிறோம்.எங்கள் இருவருக்கும் இடையே ஏராளமான பசுமையான நினைவுகள் இருக்கிறது.
எங்கள் இருவருக்கும் இடையே தொடக்கக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி பேசியிருக்கிறோம்.எங்கள் வாழ்க்கையில் இருக்கும் ஒற்றுமைகளைப் பற்றி பேசியிருக்கிறோம்.தற்போது உள்ள நிலைக்கு நாங்கள் எளிதாக வந்துவிடவில்லை.முட்டி உடைந்து.. கால் உடைந்து எழுந்து நின்று அதன்பிறகு இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்.அதைப்பற்றி நாங்கள் இருவரும் மனதார விவாதித்து இருக்கிறோம்.அதற்காக அவருக்கு நன்றி.
நாம் அனைவரும் ஒரு கணக்கு போடுவோம்.இந்தமாதிரி படம் எடுத்தால் இவர்களுக்குப் பிடிக்கும்,ஆனால் இவர்களுக்குப் பிடிக்காது. இந்தமாதிரி படம் எடுத்தால் மற்றவர்களுக்கு எல்லாம் பிடிக்கும்.ஆனால் குறிப்பிட்டவர்களுக்கு பிடிக்காதே..! என ஒரு கணக்கு வாத்தியார் போல் நிறைய கணக்குகளை போடுவோம்.நடிகர்கள் எல்லாரும் ஒரு இமேஜுக்குள் சிக்கிக் கொண்டிருப்போம்.ஆனால் அப்படியெல்லாம் ஃபஹத் பாசிலிடம் இல்லை.நான் இன்னும் இந்த கணக்குகளை தப்புதப்பாகத்தான் போட்டுக் கொண்டிருக்கிறேன். இவரைப் போல் என்னால் இருக்க முடியவில்லை.அவர் தன்னுடைய கதாபாத்திரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.கதை நன்றாக இருக்கிறதா? அதில் தன்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறதா? என்பதை மட்டுமே பார்க்கிறார்.இந்த ‘கன்டன்ட்’டை இரசிகர்களுக்கு நம்மால் கரெக்டாக கொடுத்துவிட முடியுமா? என்று சிந்திக்கும் நபர்தான் பகத் பாசில்.அதனால்தான் அவரால் இதுபோன்று கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கமுடிகிறது.இதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.
அவருடைய கதாபாத்திரத்திற்கு அனைத்து மொழிகளிலும் அவரே பின்னணியும் பேசி இருக்கிறார்.நாமெல்லாம் ஒரு கேரக்டராக இருக்கவேண்டும் என நினைப்போம்.ஆனால் பகத் அந்த கேரக்டராகவே இருப்பார்
எந்த ஒரு படத்திலும் ஒரு குழந்தை இருந்தால் அவர்கள் அந்த உலகத்தை உண்மையானதாக மாற்றிவிடுவார்கள்.அந்தவகையில் குழந்தை நட்சத்திரம் சாரா இந்தப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்.அவருடைய நடிப்பை அனைவரும் இரசிக்கிறார்கள்.
எங்களைப் போன்று இந்த வசனத்தை இப்படி உச்சரிக்கலாமா…! அப்படி உச்சரிக்கலாமா..! என குழப்பிக் கொள்ளவேண்டாம்.இந்தப்படத்தில் உன்னுடைய வசனம் அழகாக இயல்பாக இருக்கிறது.ஒரு இயக்குநருக்கு இது போன்றதொரு கதையை உருவாக்கவேண்டும் என்ற கற்பனை இருக்கலாம்.அதில் ஒரு குழந்தை நட்சத்திரம் நடிக்கிறார் என்றால் அவர்களை கையாளுவதற்கு இயக்குநருக்கு ஒரு குழந்தைக்கான மனம் வேண்டும்.
நான் என்னுடைய சின்ன வயதில் பார்த்த படங்கள் எல்லாம் இன்றும் பசுமையாக மனதில் இருக்கிறது.இப்போது நாம் ஆறு வயதிற்கு மேற்பட்ட எட்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான படங்களை வழங்குவதில்லை.இதற்கெல்லாம் தற்போது நெட்பிளிக்ஸ், அமேசான்,வால்ட் டிஸ்னி ஆகியோர் உருவாக்கும் குழந்தைகளுக்கான படங்களை காண்பிக்கிறோம்.நாம் அனைவரும் ஒன்றிணைந்து குழந்தைகளும் பார்க்கக்கூடிய படங்களை உருவாக்க வேண்டும்.அந்தவகையில் இந்தப்படம் பெரியவர்களுக்கான குழந்தைகள் படம்.‌ இதில் எல்லாவகையான எமோஷன்களும் இருக்கிறது.
திரைப்பட இயக்குநராக அறிமுகமாகி 25 ஆவது ஆண்டை நிறைவு செய்திருக்கும் ராஜமௌலிக்கு நன்றி.‌நான் திரைத்துறையில் அறிமுகமாகி 28,29 ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.எனக்கு உங்கள் படத்தில் ஒரு நாள்..ஒரு நிமிடம்..வருவதைப் போன்ற ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கினால் நன்றி.
ஆனால் நீங்கள் எப்போதும் புது திறமைசாலிகளுக்கும்…புதிய கண்டெண்டுகளுக்கும்..ஆதரவு அளிப்பதற்காக நன்றி.அதில் உங்களுடைய முத்திரையை இடம்பெறச் செய்ததற்கும் நன்றி.இந்தப்படத்தின் கதை புதிதாக இருக்கிறது என்று நீங்கள் சொன்ன ஒரு வார்த்தை ஒட்டுமொத்தப் படக்குழுவிற்கும் மிகப்பெரிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.
இந்தியன் சினிமாவை உங்களுடைய பெயர் மூலம் உலகத்திற்கு வழங்கியதற்கு நன்றி. இதனால் இங்குள்ள அனைவருக்கும் அடையாளம் கிடைத்திருக்கிறது.உங்களுடைய படங்களை இந்தியபடங்கள் என்று பார்க்க வைப்பதற்காக நன்றி.
நான் ஒரு கதை சொல்கிறேன்.உங்களை அமர்ந்து படம் பார்க்க வைப்பேன்.உங்களுடைய நேரத்தை வீணடிக்க மாட்டேன் என ஒவ்வொரு இரசிகர்களையும் திரைப்படத்தை பார்க்க வைக்கின்ற உங்களுடைய திறமைக்கும், நம்பிக்கைக்கும் நன்றி.அதனை இந்த திரைப்படத்திலும் இரசிகர்களால் பார்க்கமுடியும் என்று நம்புகிறேன்.‌இதன் காரணத்தினாலே இந்தப்படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுகிறது
வழக்கமான படங்கள் வெளியாகும் தருணத்தில் ஒரு வித்தியாசமான கன்டென்ட் ஜெயிக்கும் என்று நீங்கள் நினைத்திருக்கிறீர்கள். அதனால் இதிலும் திரைத்துறையில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறீர்கள் அதேபோல் ஒரு தயாரிப்பாளர்களாக..இந்த திரைப்படத்தை இவ்வளவுதான் விற்பனை செய்யமுடியும் என்ற அளவுகோல் உண்டு.அதனால் அதிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.அதேபோல் நடிகர்களுக்கும் இந்த வட்டத்திற்குள்தான் நடிக்கமுடியும் என்ற ஒரு எல்லை உண்டு.அந்த வசதியான ஒரு வட்டத்தை உடைத்திருக்கிறீர்கள்.அந்தவகையிலும் நீங்கள் நடிகர்களிடத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.‌
எனவே எல்லா வயதினரும் குடும்பத்தினருடன் அக்டோபர் 2 ஆம் தேதி’டோன்ட் டிரபுள் தி டிரபுள்’படத்தைப் பார்க்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts