சர்தார் 2 – திரைப்பட விமர்சனம்
நாட்டுப்பற்று மிக்க கமுக்க ஒற்றர்,தண்ணீரை வைத்து நாட்டை அடிமையாக்க நினைக்கும் எதிரிகளை வீழ்த்தும் படம் சர்தார்.அப்படத்தின் தொடர்ச்சியாக வந்திருக்கும் சர்தார் 2 படத்திலும் அடிப்படைக்கதை அதேதான்.எடுத்துக்கொண்ட சிக்கல் வேறு.
நமதுநாட்டைப் பற்றிய இரகசியங்களைக் கைப்பற்றத
துடிக்கும் எதிரியின் எண்ணத்தை சர்தாரும் அவர் மகனும் முறியடிக்கிறார்கள்.எப்படி? என்பதைப் பெரிதாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.
வேல் கொண்டு ஆடும் கார்த்தி வெறிகொண்டு எதிரிகளைத் தாக்கும் காட்சிகளில் பிரமிக்க வைக்கிறார்.
அப்பாவாகவும் மகனாகவும் நடித்திருக்கும் அவர்,தோற்றம்,நடிப்பு ஆகியனவற்றில் வியக்க வைத்திருக்கிறார்.சர்தாரை முந்த வேண்டுமென்பதற்காக கடும் ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டிய சண்டைகள் மற்றும் காட்சிகளில் பங்கேற்றிருப்பது அவருடைய,பாராட்டப்படவேண்டிய தனித்திறன்.
மாளவிகா மோகனன்,படத்தில் போட்டிருக்கும் சண்டைகள் இரசிக்க வைக்கின்றன.
ஆஷிகா ரங்கநாத் படம் முழுக்க வந்து மனம் நிறைக்கிறார்.
முந்தைய பாகத்தின் தொடர்ச்சிக்காக ஒரு காட்சியில் வருகிறார் ரஜிஷா விஜயன்.
எதிர்நாயகன் எஸ்.ஜே.சூர்யா வலுவான கதாபாத்திரமேற்று அதைவிட வலுவாக நடித்திருக்கிறார்.
யோகி பாபு, நிழல்கள் ரவி கூட்டணி சிரிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்,தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வண்ணம் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி மிரட்டியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் தன் இருப்பை அழுத்தமாகப் பதிய வைத்திருக்கிறார்.ஆங்கிலப்படங்களை மிஞ்சும் வண்ணம் பின்னணி இசை சேர்த்திருக்கிறார்.
விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.நீளம் அதிகம் எனும் சவாலை எதிர்கொண்டு படத்தைப் பாதுகாக்க முனைந்திருக்கிறார்.
உளவாளிகள் மேற்கொள்ளும் ஜப்பான் திட்டம், ரா அமைப்பின் கதை சொல்லும் காட்சிகள் உட்பட பல்வேறு விசயங்களை துணை சேர்த்துக்கொண்டு திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.
அதன்மூலம்,நாடும் நாட்டு மக்களும் எவ்வளவு விதவிதமான ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பனவற்றை விளக்கிச் சொல்லியிருக்கிறார்.அதை பரப்புரை பாணியில் கதாபாத்திரங்களுக்கிடையேயான உரையாடல்கள் மூலம் கூடுதலாக வெளிப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.
எவ்வளவு சவால்கள் வந்தாலும் அவற்றை மீறி ஒவ்வொரு குடிமகனும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்கிற குறிப்புகளையும் கொடுத்திருக்கிறார்.
சர்தார் படத்தில் கொடுத்த வியப்பை சர்தார் 2 வில் முந்தவேண்டும் என்கிற தவிப்புடன் கடும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஒவ்வொரு சட்டகமும் (ஃப்ரேம்) சாட்சியாக அமைந்திருக்கிறது.
– இளையவன்













