என்னை நம்பி ஏழுகோடி ரூபாய் – கருணாஸ் நெகிழ்ச்சி
கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தேசியவிருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ்பழூர் எழுதி இயக்கியுள்ள படம் ‘என்ன விலை’.இப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர்.
இந்த திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் 7 அன்று நடைபெற்றது.
நிகழ்வில் தயாரிப்பாளர் ஜித்தேஷ் விஸ்வாம்பரன் பேசியதாவது….
பல சிறிய விஷயங்களுக்கு இந்தப்படம் முன்னுதாரணமாக இருக்கும்.படக்குழுவினரோடு இராமேஸ்வரம் மக்களும் கடுமையான உழைப்பு இந்தப்படத்திற்குக் கொடுத்திருக்கிறார்கள்.அதற்கான பலனை நீங்கள் தருவீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.
நடிகர் கான்ஸ்டபிள் சுந்தரம்….
ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி.நடிகர் கருணாஸ் பெரிய நடிகர் என்ற அலட்டல் இல்லாமல் எங்களிடம் இயல்பாகப் பழகினார்.படம் நன்றாக வந்திருக்கிறது என்றார்.
நடிகர் பிரதீப்….
இது ஒரு அருமையான படம்.இதில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர்,தயாரிப்பாளர்,அண்ணன் கருணாஸூக்கு நன்றி.படம் வெற்றிபெற வேண்டிக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் தர்ஷன்….
இந்தப்படத்தில் எனக்கு ரைட்டர் கேரக்டர்.அனுப்பி வைத்த எல்லா விருதுவிழாக்களிலும் இந்தப்படம் விருது வென்றது.மிகச்சிறந்த வெற்றிப்படமாக இது மாறவேண்டும்.அனைவரும் திரையரங்குகளில் வந்து படம் பாருங்கள்.படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
நடிகை நிரோஷா….
இந்தப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி.நடிப்பு என்று தெரியாமல் இயல்பானதாக இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்.உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை என்றார்.
நடிகர் கவி….
பல நாடுகளின் விருதுவிழாக்களில் இந்தப்படம் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளியது.எப்போது நம்நாட்டு மக்களுடன் இந்தப்படத்தைப் பார்க்க இருக்கிறோம் என்று ஆவலுடன் காத்திருந்தோம்.மக்களுடன் இணைந்து இந்தப்படத்தைக் கொண்டாட இருக்கிறோம். முக்கியமான படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி என்றார்.
நடிகர் பாண்டி….
ரொம்பநாள் இந்தப்படத்திற்காகக் காத்திருந்தோம்.வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்,இயக்குநருக்கு நன்றி.’பசங்க’,’கோலி சோடா’ படங்களைத் தாண்டி பெயர் எடுக்கவேண்டும் என ஒவ்வொரு படத்திலும் எதிர்பார்த்தேன்.அது இந்தப்படத்தில் நடக்கும் என நம்புகிறேன். உங்கள் அனைவரது ஆதரவும் தேவை என்றார்.
நடிகை சாஷா….
இயக்குநர் சஜீவ் சார்,தயாரிப்பாளர் ஜித்தேஷ் சாருக்கு நன்றி.இந்தப்படத்தில் ஹீரோவின் தங்கை மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.கிராமத்துக் கதையில் நடிக்கவேண்டும் என்ற எனது கனவு இந்தப்படம் மூலம் நிறைவேறி இருக்கிறது.இராமேஸ்வரத்தில் இந்தப்படம் படமாக்கப்பட்டுள்ளது.எல்லோருமே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம்.13 விருது விழாக்களில் இந்தப்படம் விருது வென்று இருக்கிறது.எல்லோரும் திரையரங்குகளில் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள் என்றார்.
இயக்குநர் சஜீவ் பழூர்….
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’,’சூது கவ்வும்’,’பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்கள் சின்னகருவில் இருந்து கதையானது.தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அதில் ‘என்ன விலை’ படத்தை இயக்கியுள்ளேன்.படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் என்றார்.
நடிகர் கருணாஸ்….
2001 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் பாலா அண்ணன் இயக்கத்தில் லொடுக்கு பாண்டியாக திரையுலகில் எனது பயணத்தை ஆரம்பித்தேன்.நான் அதிகம் மலையாளப் படங்களை விரும்பிப் பார்ப்பேன்.அதனால் மலையாள ரைட்டர்,இயக்குநர்கள், டெக்னீஷியன்ஸ் உடன் இணைந்து ஒரு படமாவது பணிபுரிய ஆசைப்பட்டேன்.அது இப்போது நடந்திருக்கிறது.இந்தப்படம் சாமானியர்களைப் பற்றியது.அதனால்தான் இயல்பான நடிகர்களை தேர்வு செய்துள்ளார்.எனக்கு இன்று பெரிதாக வியாபாரம் இல்லை. இருந்தாலும் என்னை நம்பி ஏழுகோடி ரூபாய் தயாரிப்பாளர்கள் இந்தப்படத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள்.அந்த அளவுக்கு அவர்களுக்குக் கதை மீது நம்பிக்கை.இந்திய சினிமாவில் இதுவரை யாரும் எழுப்பாத ஒரு கேள்வியை இந்தப்படத்தில் இயக்குநர் சஜீவ் எழுப்பி இருக்கிறார்.எனது இருபது ஆண்டுகால ஆசையை இந்தப்படம் நிறைவேற்றி இருக்கிறது.
அட்வகேட் கதாபாத்திரத்தில் நிமிஷா அற்புதமாக நடித்திருக்கிறார்.எல்லா கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமானவர்களை இயக்குநர் திறமையாக தேர்வு செய்து இருக்கிறார்.இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நெட்ஃபிலிக்ஸ் போன்ற முன்னணி ஓடிடி தளம் விலைக்கு வாங்கி இருப்பது மகிழ்ச்சி.’நந்தா’ படத்திற்குப் பிறகு என் மனதிற்கு மிகவும் நெருக்கமான திரைப்படம் இது.இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்து என் மனைவி முதன்முதலாக இந்தப்படத்தில்தான் பாராட்டி இருக்கிறார். நிமிஷா மேடமும் என்னுடைய நடிப்பை பார்த்து சிலிர்த்து கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.நிச்சயம் இந்தப்படமும் என்னுடைய கதாபாத்திரமும் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்
இவ்வாறு அவர் பேசினார்.













