அங்கீகாரம் படத்தின் வியாபாரம் – ஆச்சர்ய செய்தி
தயாரிப்பாளர் கேஜேஆர்,இப்போது கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.நயன்தாரா நடித்த அறம்,விஜய்சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம்,சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, டாக்டர் மற்றும் அயலான் உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம் அங்கீகாரம்.இப்படத்தில்,சிந்தூரி விஸ்வநாத்,விஜி வெங்கடேஷ்,ஆண்டனி,ரங்கராஜ் பாண்டே,மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு ஏ.விஸ்வநாத்,சண்டைப் பயிற்சி பீட்டர் ஹெயின், படத்தொகுப்பு ஷான் லோகேஷ், கலை இயக்கம் ராமு தங்கராஜ், ஒலி வடிவமைப்பு சம்பத் ஆழ்வார், நடனம் ஷெரீப்.
இயக்குநர் பா.இரஞ்சித்திடம் துணை இயக்குநராகப் பணிபுரிந்த ஜே.பி.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் அங்கீகாரம் படத்தின் முதல்பார்வை கடந்த ஆண்டு வெளியானது.
இப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த் – அஜித்பாஸ்கர் – அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
அடித்தட்டு வாழ்வில் இருக்கும் ஓர் இளைஞன் உத்வேகத்தோடு ஓட்டப்பந்தய வீரராகிறார்.பல கனவுகளோடு வரும் அவருக்கு அங்கு சரியான அங்கீகாரம் கிடைத்ததா? இல்லையா? என்பதைத்தான் இப்படம் பேசியிருக்கிறது என்கிறார்கள்.இதில்,வளரும் வீரர்கள் சந்திக்கும் அவலங்கள்,விளையாட்டுத்துறையில் நடக்கும் அட்டூழியங்கள் ஆகியனவற்றையும் பதிவு செய்திருக்கிறார்களாம்.
இப்படம் ஜூன் 26 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவிருக்கிறது.
அறிமுகநாயகனின் படம் உலகமெங்குமா? என்றால் ஆமாம் என்று சொல்லி வியக்கவைக்கிறார்கள்.
இந்தப்படத்தின் முதல்பார்வை முன்னோட்டம் ஆகியன வெளியானதிலிருந்து படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.அதை மெய்ப்பிக்கும் வகையில் இப்படத்தின் வியாபாரம் நடந்துகொண்டிருக்கிறது.
இப்படத்தின் எஃப்எம்எஸ் எனப்படும் வெளிநாட்டு விநியோக உரிமையை பிரபல விநியோகஸ்தார் யாகியாபாய் பெற்றிருக்கிறாராம்.
இப்படத்தை கேரள மாநிலத்தில் திரையிடும் உரிமையை ஐஎம்பி ஃபிலிம்ஸ் எனும் நிறுவனம் பெற்றிருக்கிறது என அறிவித்திருக்கிறார்கள்.இந்நிறுவனம்தான் அண்மையில் வெளியாகி பெரியவெற்றியைப் பெற்ற சூர்யாவின் கருப்பு படத்தை வெளியிட்ட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கர்நாடகா உரிமையை கேகே ஃபிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்று அறிவித்திருக்கிறார்கள்.
அதேபோல,ஆந்திரா உரிமையை மகேஸ்ரெட்டியும் வடமாநில வெளியீட்டு உரிமையை நம்பியும் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக பெரிய கதாநாயகர்களின் படங்களுக்கு மட்டும்தான் இம்மாதிரி எல்லா மாநிலங்களிலும் வியாபாரம் நடக்கும்,வெளிநாட்டு வியாபாரம் நடக்கும் என்று சொல்வார்கள்.
அங்கீகாரம் படத்துக்கு நடந்திருக்கும்,இந்த வியாபாரங்கள் வெளியீட்டுக்கு முன்பே கிடைத்த வெற்றிக்கான அங்கீகாரம் என்கிறார்கள்.











