சினிமா செய்திகள்

காளிதாஸ் 2 படம் வெளியீட்டுத் தேதி மாற்றம்

இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில்,பரத் நடிப்பில் வெளியான படம் காளிதாஸ்.2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தைத் தொடர்ந்து காளிதாஸ் 2 படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.‌இதில் பரத் மற்றும் அஜய் கார்த்தி,பிரகாஷ்ராஜ்,’ஆடுகளம்’ கிஷோர்,சுரேஷ்மேனன்,ஆனந்த்நாக்,பவானி ஸ்ரீ,அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் பிரபலமான சங்கீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்திற்கு சாம் சி.எஸ்.இசையமைக்கிறார்.துரைராஜ் கலை இயக்கத்தையும்,புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்புப் பணிகளையும் கவனிக்கிறார்கள்.

இந்தப்படத்தை ஸ்கை பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் தயாரிப்பாளர் யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.இப்படம் முழுமையாகத் தயாராகிவிட்டது.

இப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.மார்ச் 8 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது.

ஆனால்,இப்போது படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்படவிருக்கிறது என்கிறார்கள்.

அதற்குக் காரணம்,விக்னேஷ்சிவன் இயக்கத்தில் பிரதீப்ரங்கநாதன் நடித்துள்ள எல்ஐகே தான் என்கிறார்கள்.

அந்தப்படம் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.அப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என்றுதான் முதலில் சொல்லப்பட்டது.ஆனால், திடீரென ஏப்ரல் 3 என்று அறிவித்துவிட்டார்கள்.

அந்த அறிவிப்பு மட்டுமின்றி அந்தப்படத்தைத் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடுவது ரெட்ஜெயண்ட் என்பதும் இன்னொரு முக்கிய காரணமாக இருக்கிறதாம்.

ரெட்ஜெயண்ட் நிறுவனம் முக்கியமான நல்ல திரையரங்குகளையெல்லாம் எல்ஐகே படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிடுவார்கள்,திரையரங்குக்காரர்களும் பிரதீப்ரங்கநாதன் படமா? பரத் படமா? என்றால், பிரதீப் படத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள்.

நல்ல கதையம்சத்துடன்,படம் நல்லாயிருக்கு என்கிற பெயரைப் பெற்றிருக்கும் காளிதாஸ் 2 படத்துக்கு நல்ல திரையரங்குகளுடன் சரியான வெளியீட்டுத் தேதியும் அமைந்தால் நிச்சயவெற்றி கிடைக்கும் என்பதால், ஏப்ரல் 3 என்கிற தேதியை மாற்றி ஏப்ரல் 10 ஆம் தேதி இந்தப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம்.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

சின்னபடம் நல்லபடம் என்று பெயர் பெற்ற ஒரு படத்திற்கு பெரிய தயாரிப்பாளரான லலித்குமார்,முன்னணி இயக்குநரான விக்னேஷ்சிவன், முக்கிய நடிகரான பிரதீப் ரங்கநாதன், மிகப்பெரிய வெளியீட்டு நிறுவனமான ரெட்ஜெயண்ட் ஆகியன எதிராக வந்து நின்றிருப்பது திரையுலகில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Related Posts