சினிமா செய்திகள்

எல் ஐ கே படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி – தயாரிப்பாளர் முடிவு

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் எல்ஐகே.விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில்
எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படம் வெளியீடு குறித்து கடந்த ஆண்டு, மே 12 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், இந்தத் திரைப்படம் 2025 செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர்.சொன்னபடி அப்போது அந்தப்படம் வெளியாகவில்லை.

அதன்பின் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.அப்போதும் படம் வெளியாகவில்லை.

அடுத்து, டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், அந்தத் தேதியிலும் படம் வெளியாகவில்லை.

அதை கடைசிநேரத்தில்தான் சொன்னார்கள். அப்போதே இப்படம் 2026 பிப்ரவரி மாதம் காதலர் நாளையொட்டி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டது.

ஆனால்,அப்போதும் படம் வெளியாகவில்லை.

அதேநேரம்,இவ்வாண்டு கோடை விடுமுறையில் இந்தப்படத்தைக் கண்டிப்பாக வெளியிட்டுவிட வேண்டும் என்று திட்டமிட்டு படக்குழுவினர் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.

அதன்படி, இந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அதை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இப்போது அவர்கள் வெளியிடவிருப்பதாகச் சொல்லப்படும் தேதி ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை.ஒருநாள் முன்னதாக ஏப்ரல் 9 ஆம் தேதியே வெளியிடலாமா? என்கிற ஆலோசனையும் நடந்துகொண்டிருக்கிறதாம்.

இந்தப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் லலித்குமாருக்கும் இயக்குநர் விக்னேஷ்சிவனுக்கும் இடையே ஏற்பட்ட கடும் கருத்துவேறுபாடுதான் படவெளியீடு தாமதமாகக் காரணம் என்று சொல்லப்பட்டது.

இப்போது,அவை சரியாகிவிட்டதா என்றால்?

அது தொடர்பாகவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.இந்தப்படம் மற்றும் ஹாய் ஆகிய இரண்டு படங்களையும் இருவரும் கருத்தொருமித்துச் செயல்பட்டால்தான் வெளியாகும் என்பதுதான் எதார்த்தம்.அதனால், கொஞ்சம் முன்னே பின்னே என்றாலும் ஆளுக்குக் கொஞ்சம் விட்டுக் கொடுத்து படங்களை வெளியிடலாம் என்கிற எண்ணத்துக்கு இரண்டு தரப்புமே வந்திருக்கிறதாம்.

அதனால், ஏப்ரல் 9 அல்லது 10 ஆம் தேதி படத்தை வெளியிடலாம் என்று திட்டமிட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்தமுறையாவது படம் வெளியாகிவிடுமா? என்கிற கேள்வியும் எல்லோருக்கும் இருக்கிறது.என்ன நடக்கப்போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts