சினிமா செய்திகள்

ஜனநாயகனுக்கு இன்னொரு பேரிடி – தவிக்கும் தயாரிப்பு நிறுவனம்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பூஜை செப்டம்பர் 4,2024 அன்று சென்னையில் நடைபெற்றது.அதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

செப்டம்பர் 5 ஆம் தேதி பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.

2025 சனவரி 25, குடியரசுதினத்தினை முன்னிட்டு இப்படத்தின் பெயரோடு முதல்பார்வை வெளியிட்டார்கள்.‘ஜனநாயகன்’ என்கிற பெயர் அப்போதே வெளியானது.

கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.அனிருத் இசையமைப்பாளராகவும், சத்யா ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படம் தொடங்கும்போதே இப்படத்தின் வெளியீடு 2025 அக்டோபர் என்று சொல்லிவிட்டார்கள்.2025 அக்டோபர் 1 ஆம் தேதி ஆயுதபூசையையொட்டி இப்படம் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், இணைய ஒளிபரப்பு உரிமை வியாபாரத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக இந்தப்படத்தின் வெளியீடு சில மாதங்கள் தள்ளிப்போனது.

2026 ஆம் ஆண்டு தைப்பொங்கலையொட்டி சனவரி மாதம் 9 ஆம் தேதி இந்தப்படம் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.இதுகுறித்த அறிவிப்பை மார்ச் 24,2025 அன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

இந்நிலையில், இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமையை அமேசான் நிறுவனம் பெற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.அந்நிறுவனம் இப்பட ஒளிபரப்பு உரிமைக்காக அந்நிறுவனம் சுமார் 120 கோடி கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்த நிறுவனம் இந்தப்படத்தை ஒளிபரப்ப வேண்டிய நாளை முடிவுசெய்துவிட்டு அதற்கு ஒருமாதம் முன்பாக இப்படம் வெளியாகவேண்டும் என்று நிபந்தனை விதித்ததை ஏற்றுக்கொண்டு சனவரி 9,2026 என்கிற தேதியை அறிவித்ததாகச் சொல்லப்பட்டது.

அறிவித்தபடி அந்தத் தேதியில் படம் வெளியாகவில்லை.

தணிக்கைக்குழு படத்துக்கு உரியநேரத்தில் சான்றிதழ் வழங்கவில்லை என்று கோரி படத்தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றம் சென்றது.அதன்காரணமாக தணிக்கைச் சான்று இப்போதுவரை கிடைக்காமல் இருக்கிறது.

தணிக்கை வாரியத்தின் மீதான வழக்கைத் திரும்பப்பெற்று மறுதணிக்கைக்குப் படக்குழு ஒப்புக்கொண்டது.ஆனாலும் தணிக்கை வாரியம் நடைமுறைச் சிக்கல்களைக் காரணமாகச் சொல்லி இப்போதுவரை படத்தைப் பார்த்து சான்றிதழ் கொடுக்கவில்லை.

இதனால்,இந்தப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்கள்,பெரும் தொகையை முன்பணமாகக் கொடுத்துவிட்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்னொருபக்கம், அறிவித்தபடி சனவரி 9 அன்று படம் வெளியாகவில்லை என்பதால், இணைய ஒளிபரப்பு உரிமைக்காகக் கொடுத்த தொகையில் சுமார் பத்துகோடியைக் குறைத்துத்தான் தருவோம் என்று அந்த நிறுவனம் சொல்லிவிட்டதென்றார்கள்.அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்றாக வேண்டிய கட்டாயம்.

இப்போது அடுத்த அதிரடி நடந்திருக்கிறது.

அது என்ன?

இன்னமும் படவெளியீட்டுத் தேதி எப்போது என்று முடிவு செய்ய இயலவில்லை என்கிற சூழல் தொடருவதால்,இணைய நிறுவனம் படத்தயாரிப்பு நிறுவனத்திடம்,நீங்கள் சொன்னபடி படத்தை வெளியிடவில்லை, அதற்குப்பிறகு நீங்கள் கேட்ட அவகாசங்களைக் கொடுத்த பின்பும் வெளியீட்டுத் தேதியை சொல்லவில்லை,எனவே, ஒப்பந்தத்தை இரத்து செய்கிறோம் என்று அறிவித்துவிட்டதாம்.

இதனால்,ஏற்கெனவே சிக்கலில் இருக்கும் கேவிஎன் நிறுவனம் மேலும் சிக்கலில் மாட்டிக்கொண்டது என்று திரைத்துறையினர் சொல்கிறார்கள்.

Related Posts