மேட் இன் கொரியா – திரைப்பட விமர்சனம்
உலகின் பல்வேறு நாடுகளின் கலாச்சாரம் பண்பாடு ஆகியன தமிழ்ப்பண்பாட்டுடன் இயைந்திருக்கின்றன என்பது இப்போது வெளிப்படுகிற செய்தி.இங்கிருந்து சுமார் 5000 கிமீ தொலைவில் இருக்கும் கொரியாவின் பண்பாடுகளுக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்கிற ஆழமான தகவலை அழகான காட்சிமொழியுடன் கலந்து கொடுத்திருக்கும் படம் மேட் இன் கொரியா.
தமிழ்நாட்டின் ஒரு மலைப்பாங்கான ஒரு சிறியகிராமத்தில் வசிக்கும் நாயகி பிரியங்கா மோகனுக்கு, தென் கொரிய கலாச்சாரம் மற்றும் கலைகளின் மீது மிகுந்த ஆர்வம்.அதனால் அங்கு செல்லும் கனவை வளர்த்துக் கொள்கிறார்.ஆனால் வாழ்க்கைச் சூழலில் அது நடக்காமல் போகிறது.திடீரென அவருக்கு கொரியா செல்லும் சூழல் நேர்கிறது.மகிழ்வுடன் செல்லவேண்டிய அந்த நாட்டுக்கு துயருடன் செல்லவேண்டிய நிலை.எதிர்பாராதவிதமாக கொரியாவின் தலைநகரான சியோல் (Seoul) நகரத்திற்குச் செல்கிறார்.தெரியாத மொழி, அறிமுகமில்லாத மனிதர்களிடையே அவர் என்ன செய்கிறார்? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.
மொத்தத் தொடரும் தன் மீதுதான் பயணிக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்பப் பொறுப்புடன் நடித்திருக்கிறார் பிரியங்கா மோகன்.துள்ளித் திரியும் கிராமத்து யுவதி, காதல் மற்றும் அதனால் சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்,கொரியாவில் சந்திக்கும் மனிதர்களைக் கையாளும் கடும்பொறுப்பு ஆகியனவற்றை தன் நடிப்பால் அநாயசமாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.அவர் சிரித்தால் நாமும் சிரிக்கிறோம் அவர் கலங்கினால் நாமும் கலங்குகிறோம் அவர் அழுதால் நாம் துடிக்கிறோம் எனுமளவுக்கு நம்மை ஆட்கொள்கிறார்.
பிரியங்காவின் காதலராக நடித்திருக்கும் ரிஷிகாந்த்,அதற்குப் பொருத்தமாக இருக்கவேண்டுமென மெனக்கெட்டிருக்கிறார்.
பார்க் ஹே-ஜின், நோஹூ ஜின், ஜாங் ஜேஹியான் உள்ளிட்ட கொரிய நடிகர், நடிகைகளும் மிக இயல்பாக நடித்து கதையுடன் நம்மைப் பயணிக்க வைத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரசன்னகுமாருக்கு, கொரியாவில் படப்பிடிப்பு நடத்தும் நல்வாய்ப்பு.அதைச் சரியாகப் பயன்படுத்தி சிறந்த காட்சியனுபவங்களைக் கொடுத்திருக்கிறார்.
ஷேகாம் அப்துல் வகாப் இசையமைத்திருக்கிறார்.நாயகியின் பல்வேறு மன உணர்வுகளை இசையால் மொழிபெயர்த்து திரைக்கதைக்கு வலுச் சேர்த்திருக்கிறார்.காட்சியழகா? அதன் பின்னணி இசை அழகா? என பட்டிமன்றமே நடத்தலாம்.
இயக்குநர் ரா.கார்த்திக், ஓர் அழகான பயணத்தைக் கதைக்களமாகக் கொண்டு,கொரியாவைப் பற்றிய பல புதிய விசயங்களை அறியத்தந்திருக்கிறார்.மிக மெல்லிய நாயகியை முன்னிறுத்தி எவ்வளவு எதிர்மறை நிகழ்வுகள் நடந்தாலும் அவற்றிலுள்ள நேர்மறையைக் கண்டறிந்து பயணிக்க வேண்டும் என்கிற மிக வலிய செய்தியைச் சொல்லி வரவேற்புப் பெறுகிறார்.
– இளையவன்.
குறிப்பு – இப்படம் மார்ச் 12,2026 முதல் நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் காணக் கிடைக்கிறது.











