நாங்கள் – திரைப்பட விமர்சனம்
திருமண முறிவுகள் மிக இயல்பாகிவிட்ட இக்காலகட்டத்தில், ஒரு திருமண முறிவால் அம்மாவைப் பிரிந்து அப்பாவுடன் வாழ நேரும் மூன்று சிறுவர்களை மையப்படுத்திய படம் இது.
சகோதரர்களாக சிறுவர்கள் மித்துன், ரித்திக் மோகன், நித்தின்.டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.பெற்றோர் பிரிவால் ஏற்படும் பாதிப்புகளை வசனங்கள் இன்றி நடிப்பிலேயே சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.பெரும்பாலும் சோகமாகவே இருக்கும் அவர்கள் சில காட்சிகளில் மகிழ்ச்சியுடன் சிரிக்கிறார்கள். அதையும் அளவாகச் செய்திருப்பது நன்று.
தந்தையாக நடித்திருக்கும் அப்துல் ரஃபே,தொழில் சிக்கல்கள் மனச் சிக்கல்கள் ஆகியனவற்றோடு குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் இளைஞர்கள் வாழ்வைப் பிரதிபலிக்கும் வேடத்தை ஏற்று அதை பொறுப்பாகச் செய்திருக்கிறார்.
சிறுவர்களின் அம்மாவாக நடித்திருக்கும் பிரார்த்தனா ஸ்ரீகாந்த், தாத்தாவாக நடித்திருக்கும் ஷாப் ஜான் எடத்தட்டில் ஆகியோர் குறைவாக வந்தாலும் நிறைவு.படத்தில் இடம்பெற்றிருக்கும் நடிகர்களுக்கு இணையாக கேத்தி என்கிற நாய் கவனம் ஈர்க்கிறது.
வேத் சங்கர் சுகவனம் இசையமைத்திருக்கிறார். அவருடைய இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை காட்சிகளின் கனத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறது.
எழுத்து, இயக்கம் மட்டுமின்றி ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறார் இயக்குநர் அவினாஷ் பிரகாஷ்.
அவரே காட்சியை எழுதியவர் என்பதால் அதை நூறுவிழுக்காடு சரியாகத் திரையில் கொண்டுவரும் காட்சிகளையும் வைத்து நல்ல காட்சியனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்.
அதேபோல் படத்தொகுப்பும் கதையை நேர்த்தியாகச் சொல்லிச் செல்லும் வண்ணம் அமைந்திருக்கிறது.
இக்காலகட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் சந்திக்கும் சிக்கல்களின் நுட்பமான உணர்வுகளை மையப்படுத்திய கதை, அவற்றை சிறுவர்கள் மூலம் வெளிப்படுத்திய விதம், தந்தை கதாபாத்திரத்தின் மூலம் நல்ல கருத்தைச் சொல்லியிருப்பது ஆகியனவற்றின் மூலம் படத்தை மட்டுமின்றி தன்னையும் ஊன்றிக்கவனிக்க வைத்திருக்கிறார் அவினாஷ் பிரகாஷ்.
– இளையவன்











