செய்திக் குறிப்புகள்

அகில இந்திய பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முதல்பாடல் – தக்லைஃப் தடாலடி

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன்,சிலம்பரசன்.டி.ஆர்,அசோக் செல்வன்,த்ரிஷா உட்பட பலர் நடித்திருக்கும் படம் தக் லைஃப்.

இப்படத்தில், ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் தோன்றுகிறார். சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, அஷோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாஸர், அலி ஃபஸல், சான்யா மல்ஹோத்ரா ஆகியோருடன் இந்திய அளவில் புகழ்பெற்ற மேலும் பல நட்சத்திரங்கள் இணையவிருப்பதால் பெரும் நட்சத்திரப் பங்கேற்பு கொண்ட படமாக தக் லைஃப் உருவாகி வருகிறது.

திரையிலும் திரைக்குப் பின்னுமாக இத்தனை திறமையான கலைஞர்கள் ஒன்றிணைவதால் இது ஒரு மாபெரும் திரை அனுபவமாக இருக்கும்.திரையிலும் திரைக்குப் பின்னும் புதிய, வலுவான கூட்டணியுடன் இப்படம் உருவாகியிருக்கிறது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ஆர்.மகேந்திரன், மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் சிவா ஆனந்த் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்,ஏப்ரல் 18 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த அகில இந்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில்,
இப்படத்தின் முதல் பாடலை கமல்ஹாசன், மணி ரத்னம், ஏ.ஆர்.ரகுமான், சிலம்பரசன் டி.ஆர், மற்றும் த்ரிஷா ஆகியோர் வெளியிட்டார்கள்.

ஜிங்குச்சா – வெட்டிங் ஆந்தம்  (கல்யாணப் பாட்டு) பாடல் வரிகள் கமல் ஹாசன், இசை ஏ.ஆர்.ரகுமான்.
இப்பாடல், கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டபோது சென்னை மாநகரமே இசையும் கொண்டாட்டமுமாக முழங்கியது.  

திரையுலக ஜாம்பவான்கள் கமல் ஹாசன், மணிரத்னம், மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் வெளியிட, முன்னணி நட்சத்திரங்கள் சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் அசோக் செல்வன் பங்கேற்ற இந்நிகழ்வு, இந்திய சினிமாவின் துணிச்சலான புதியதோர் அத்தியாயத்தின் தொடக்கமாகத் திகழ்ந்தது.

கல்யாணக் கொண்டாட்டம் என்னும் விறுவிறுப்பான பின்னணியில், கமல் ஹாசனும், சிலம்பரசன் டி.ஆரும், இணைந்து ஆடியிருக்கும் இந்தப் பாடல், ரகுமானுக்கே உரித்தான பாணியில் நாட்டுப்புறத் தாளக்கட்டும், தற்கால இசையும் இணைந்து அமைந்திருக்கிறது. கமல் ஹாசனின் வரிகளுடன், ஈர்க்கும் குறும்பும், துள்ளலுமான இந்தப் பாடல், பல அடுக்குகளைக் கொண்ட தக் லைஃப் உலகத்துக்கான வண்ணமயமான முதல் வாசலாக அமைந்துள்ளது.

இத்துடன், தக் லைஃப் படக்குழுவினர், ஜஸ்ட் க்ரோ தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து நிகழ்த்தும் தக் லைஃப் திருவிழா, ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மே மாதம் 23-ஆம் தேதி நிகழும் என்று அறிவித்திருக்கிறார்கள்.தக் லைஃப் திரைப்படத்தின் பாடல் உரிமைகளை சரிகம நிறுவனம் பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி இப்படத்தின் உலகளாவிய விநியோகஸ்தர்கள் பட்டியலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

அதன்படி,இப்படத்தைத் தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

சர்வதேச அளவில் – ஏபி இண்டர்நேஷனல், ஹோம் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட்டுடன் இணைந்து வெளியிடுகிறது.

வட இந்தியாவில் பென் மருதர் சினி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஸ்ரேஷ்த் மூவீஸ் நிறுவனமும், கர்நாடகாவில் ஃபைவ் ஸ்டார் செந்திலும் வெளியிடுகிறார்கள்.

திரையரங்கு வெளியீட்டுக்குப் பின்னான இணைய ஒளிபரப்பு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் தளம் பெற்றிருக்கிறது.

மிகத் தெளிவாகத் திட்டமிட்டு இந்தப் படத்தை உருவாக்கியதோடு அதன் வெளியீட்டுக்கும் முறையான திட்டத்தை வகுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது படக்குழு.

உலகெங்கும் கமல் இரசிகர்களும் சிம்பு இரசிகர்களும் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Related Posts