பத்மாவத் விமர்சனம்
இந்தியாவைச் சேர்ந்த ராஜபுத்திர வம்சத்து சிற்றரசன் ரத்தன் சிங் (ஷாகித்கபூர்) இலங்கைக்குச் சென்று அங்குள்ள சிங்கள இளவரசி பத்மாவதியைக் (தீபிகா படுகோன்) காதலித்துக் கரம் பிடிக்கிறான்.
திருமணத்துக்குப் பின் நாடு திரும்பி முதலிரவைக் கொண்டாடத் தயாராகும் நேரத்தில் மறைந்திருந்து பார்க்கிறார் ராஜகுரு பார்ப்பனர். அதனால் அவரை நாடு கடத்துகிறார் ரத்தன்சிங்.
தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் அடைக்கலமாகும் பார்ப்பன ராஜகுரு, பத்மாவதியின் அழகை வர்ணித்து அலாவுதீனை உசுப்பேற்ற அதனால் உந்தப்பட்ட அலாவுதீன் பத்மாவதியை அடைய முயல்வதுதான் படம்.
உண்மைக் கதையில் சிற்சில மாற்றங்களைச் செய்து எடுத்திருக்கிறார்கள்.
ராஜபுத்திரரோ, சுல்தானோ, அக்கால அரசர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவற்றை சிறப்பாகக் காட்சிப்படுத்தி நம்மை வயிறெரிய வைக்கிறார்கள்.
ஷாகித் கபூர், தீபிகா படுகோன், ரன்வீர்சிங் ஆகிய மூவரும் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள், கதையிலும் நடிப்பிலும்.
காதலியின் நாணம், அரசியின் கம்பீரம் ஆகியனவற்றை ஒருங்கே வெளிப்படுத்தி ஈர்க்கிறார் தீபிகா.
ஷாகித் கபூரை விட ரன்வீர் சிங் நடிப்பில் வெளுத்து வாங்குகிறார். வீரத்தையும், காமத்தையும் கச்சிதமாகக் காட்டியதோடு, ‘பிரம்மச்சாரி உனக்கு சுன்னத் செய்யும் நேரம் வந்துவிட்டது’ என்கிற வசனத்தின் மூலமும் கைதட்டல் பெறுகிறார்.
அலாவுதீன் கில்ஜி, பத்மாவதியை அடைந்தாரா ? இல்லையா ? என்பதை வெளிப்படுத்தாமல் கடைசி வரை காப்பாற்றிவிட்டார் இயக்குநர் சஞ்சய் லீலாபன்சாலி.
பிரம்மாண்ட காட்சியமைப்புகள், முப்பரிமாண (3டி) தோற்றத்தில் கொஞ்சம் குறைந்துவிட்டன.
படத்தின் நீளம் குறைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இசையும் பாடல்களும் குறைவில்லை. ரன்வீர் சிங் ஆடிப்பாடும் பாடலின் நடன அமைப்பு மிகச்சிறப்பு.
வரலாற்றுக் கதை மற்றும் பிரம்மாண்டம் ஆகியனவற்றால் ‘பாகுபலி’யோடு ஒப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. அப்படி ஒப்பிட்டால் அதற்குப் பின்னால்தான் ‘பத்மாவத்’ நிற்கிறது.










