செய்திக் குறிப்புகள்

வெற்றிவிழாவில் மன்னிப்பு கேட்ட இயக்குநர் – தடயம் இணையத்தொடர் நெகிழ்வு

பிப்ரவரி 27,2026 அன்று இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 (ZEE 5) தளத்தில், வெளியான தமிழ் நேரடி இணையத் தொடர் “தடயம்”,இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ள இந்தத் தொடரில், சமுத்திரகனி,சிவாதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.1990 களின் இறுதிக்கால தென்னிந்திய கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள இந்தத்தொடர், தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடிக்க முயலும் காவல்அதிகாரியின் விசாரணையை மையமாகக் கொண்டது.
வெளியான சில நாட்களிலேயே இரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மை சம்பவங்களின் பின்னணியுடன் பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்தத் தொடர், இரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளதும் அதன் வெற்றியை நிரூபிக்கிறது.

இதனைக் கொண்டாடும் வகையில், படக்குழு பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்து, விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்வினில்..,

ஜீ5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது…,

பொதுவாக ஒரு சீரிஸ் வெளியான பிறகு,அதன் முழு வரவேற்பையும் பல வாரங்கள் கடந்த பிறகுதான் நாம் பார்க்கமுடியும்.ஆனால் தடயம் சீரிஸில்,இன்னும் ஒருவாரம் கூட ஆகாத நிலையில்,அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டியுள்ளது.இது மிகப்பெரிய சாதனை என்று நான் நினைக்கிறேன்.
இதற்கு முன்பு ஜீ5 தளத்தில் பல சீரிஸ்கள் வெளியானது.விலங்கு,அயலி போன்ற சீரிஸ்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை.ஆனால் அவற்றை ஒப்பிடும்போது மிகக்குறுகிய காலத்திலேயே இந்தஅளவிலான பார்வை நிமிடங்களை ‘தடயம்’ எட்டியுள்ளது.ஒரு வாரத்திலேயே இப்படிப்பட்ட சாதனைகள் உருவாகியுள்ளது என்பது மிகப்பெரிய விசயம்.இந்த சாதனைக்கு முக்கிய காரணம் பார்வையாளர்கள்தான்.அவர்கள் ஆதரவு இல்லாமல் இது நடந்திருக்காது.அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.அடுத்தடுத்து இன்னும் பல நல்லபடைப்புகள் வரப்போகிறது.அதை நீங்கள் தொடர்ந்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறோம்.
அதே நேரத்தில்,இந்தத் தொடரின் வெற்றிக்குப் பங்களித்த நடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு குழுவினருக்கும் எனது நன்றி என்றார்.

காக்டெயில் சினிமாஸ் (Cocktail Cinemas) தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா பேசியதாவது…..

இந்தஅளவிலான வரவேற்பை ‘தடயம்’ சீரிஸுக்கு கொடுத்ததற்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.நீங்கள் அனைவரும் சேர்ந்து என்னையும்,எங்கள் முழுக்குழுவையும் மிகப்பெரிய கௌரவத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள்.தொழில்நுட்பக் கலைஞர்கள்,நடிகர்கள் என அனைவரும் இணைந்து இந்த வெற்றியை உருவாக்கியுள்ளனர்.இது எனக்கு தயாரிப்பாளராக முதல்முயற்சி.ஆனால் அந்த முதல்முயற்சியே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்த வெற்றி இரசிகர்களின் ஆதரவால் மட்டுமே சாத்தியமானது.நீங்கள் இல்லையென்றால் இன்று நாங்கள் இந்த மேடையில் நிற்கமுடியாது.
இந்தப் படைப்பை என்னால் முடியும் என்று நம்பிக்கை வைத்து,எனக்கு வாய்ப்பு கொடுத்த கௌஷிக் சார் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கூறவேண்டும்.அவரின் நம்பிக்கையும் ஊக்கமும் இல்லையென்றால் இன்று இந்தத் தருணம் எனக்குக் கிடைத்திருக்காது. அதேபோல் எப்போதும் எனக்குத் துணையாக இருந்து,எந்த பிரச்சனை வந்தாலும் தைரியம் கொடுத்து முன்னேற்றிய கனி அண்ணனுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.அவரின் ஆதரவும் ஊக்கமும்தான் இன்று நான் இங்கு நிற்கக்காரணம்.இந்த சீரிஸில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள்,நடிகர்கள் மற்றும் என் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி.அனைவருக்கும் நன்றி என்றார்.

இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் பேசியதாவது…..

எல்லாருக்கும் வணக்கம்.இந்தத் தருணத்தைக் கொண்டாடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்த சீரிஸில் வேலை செய்தபோது,எங்களுக்குப் பல அழுத்தங்கள் இருந்தன.ஆனாலும் நல்லதாக ஒரு படைப்பை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் முழு ஈடுபாட்டோடு வேலைசெய்தோம்.இன்று அதன்முடிவு இரசிகர்களைச் சென்றடைந்துள்ளது என்று பார்க்கும்போது,எங்கள் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாக இதை உணர்கிறேன்.எங்கள் டீம்,இயக்குநர்,சேனலிலிருந்து கௌஷிக் சார்,முகில் சார், தயாரிப்பாளர் சார் ஆகிய அனைவரும் இந்த முழு பணிச்சூழலிலும்,குறிப்பாக போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் இசைப்பணிகளின் போது எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள்.அதேபோல் எங்கள் டீம்,பாடலாசிரியர்கள்,பாடகர்கள்,இசைக்கலைஞர்கள் என எங்களுடன் பணியாற்றிய அனைவரும் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தனர்.அவர்களின் ஆதரவும் உழைப்பும்தான் இந்த வெற்றிக்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன்.நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் கேகே பேசியதாவது…..

இந்த வெற்றிவிழா மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.எனது முதல்மேடை அனுபவமே ஒரு வெற்றி விழாவாக அமைந்ததற்கு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அஜய் சார்,இயக்குநர் ஆகியோருக்கு நான் மிகவும் நன்றி கூறவேண்டும்.அவர்களால்தான் இந்த சீரிஸில் நான் இணையும் வாய்ப்பு கிடைத்தது.அதேபோல் இயக்குநரும் முழுகுழுவும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்கள்.இந்த வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

படத்தொகுப்பாளர் தினேஷ் குமார் பேசியதாவது…..

இந்த சீரிஸில் நாங்கள் பணியைத் தொடங்கியபோது,இயக்குநர் நவீன் அண்ணா ஸ்கிரிப்டை கொடுத்து முதலில் படிக்கச்சொன்னார். படித்தவுடன் இது இரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம்.நாங்கள் நினைத்ததுபோலவே இந்த சீரிஸ் பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்தவாய்ப்பை அளித்த நவீன் அண்ணாவுக்கு நன்றி.பெரிய வாய்ப்புகள் வந்தபோதும் தனியாகச் செல்லாமல்,எங்களையும் கூட சேர்த்துக்கொண்டு சென்றதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல் இந்தசீரிஸில் ஆதரவாக இருந்த அஜய் சார்,சரவணன் சார்,எங்கள் உதவி இயக்குநர்கள் மற்றும் முழு டீமுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். நன்றி என்றார்.

இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் பேசியதாவது…..

இந்த வெற்றிக்குப் பலரின் ஆதரவு காரணமாக இருந்தது.குறிப்பாக கௌஷிக் சார் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்.எந்த நேரமாக இருந்தாலும் — இரவு நேரங்களிலும் கூட — எப்போதும் தொடர்பில் இருந்து ஆலோசனைகள் வழங்கி,இந்தப் படைப்பை இந்தஅளவுக்குக் கொண்டு வர முக்கியப்பங்கு வகித்தார்.இந்தவெற்றியின் முக்கிய காரணங்களில் ஒருவர் கௌஷிக் சார் தான்.அதேபோல் ஜீ5 அணியில் இருந்து முகில்சார் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து ஆதரவாக இருந்தனர்.மேலும் கனி அண்ணா மிகவும் ஆதரவாக இருந்து இந்தப்படைப்பு வெற்றியாக அமைய முக்கிய காரணமாக இருந்தார்.
என்னுடன் பணியாற்றிய என் முழுகுழுவினருக்கும் நன்றி.குறிப்பாக மியூசிக் டைரக்டர்,கேகே சார் இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த சீரிஸில் பல முக்கிய தருணங்களில் இசை மிகவும் பெரிய பலமாக இருந்தது.அதேபோல் எங்களுடன் பணியாற்றிய அனைத்து துணைநடிகர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என் டீம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறைந்த காலக்கெடுவில் — சுமார் 20 நாட்களுக்குள் — இந்தப்பணியை முடிக்கவேண்டிய சூழல் இருந்தது.அதனால் சிலநேரங்களில் நான் கடுமையாக நடந்துகொண்டிருக்கலாம்.அதற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.இருந்தாலும் நீங்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப்படைப்பை முடித்ததற்கு நன்றி.சில குறைகள் இருந்தால் அதை அடுத்த படைப்புகளில் சரிசெய்து இன்னும் சிறப்பாகச் செயல்பட முயற்சி செய்வேன்.அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகர் ராஜ்கிரண் தாஸ் பேசியதாவது….

எல்லாருக்கும் வணக்கம்.இந்தஅளவிலான வரவேற்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.உண்மையில் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.இந்த சீரிஸில் பங்கெடுத்த கௌஷிக் சார்,நவீன்,அஜய் சர்மா,கனி சார் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.கடந்த ஒருவாரமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாராட்டுச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.மேலும் இந்த சீரிஸை தொடர்ந்து ஆதரித்து வரும் மீடியா நண்பர்களுக்கும்,சமூகவலைதளங்களில் அதை மக்களிடம் கொண்டு சென்ற அனைத்து இரசிகர்களுக்கும் என் நன்றி என்றார்.

எழுத்தாளர், நடிகை கொற்றவை பேசியதாவது…..

‘தடயம்’ வெப் சீரிஸ் எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.அந்தவாய்ப்பை வழங்கிய இயக்குநர் நவீன் குமார் அவர்களுக்கும்,ஜீ5 நிறுவனத்திற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.என்னுடைய நிறமும் தோற்றமும் காரணமாக பல தடைகளைச் சந்தித்திருக்கிறேன்.ஆனால் இந்த கதாபாத்திரம் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை அளித்தது.இந்தவேடத்தில் ஒரு வித்தியாசமான மாற்றத்துடன் நடிக்க வாய்ப்பு கொடுத்த நவீன்குமார் அவர்களுக்கு என் சிறப்பு நன்றி.என் நடிப்பின் மீது அவர் வைத்த நம்பிக்கை எனக்கும் ஒரு பெரிய தைரியத்தைக் கொடுத்துள்ளது.என்னாலுமே நன்றாக நடிக்கமுடியும் என்ற நம்பிக்கையை இந்த வாய்ப்பு எனக்குத் தந்துள்ளது.இங்கு வந்திருக்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நன்றி என்றார்.

அழகன் தமிழ்மணி பேசியதாவது…..

என் அருமை சகோதரர்,சகோதரி பத்திரிகையாளர்களே… நான் உங்களின் ஒருவன்.என் வாழ்க்கை உங்களோடுதான் தொடங்கியது. ஆரம்பகாலத்தில் என்னோடு பணியாற்றிய பலர் இன்று கூட சகோதரர்களாகவே இருக்கிறார்கள்.என் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே ஆதரவாக இருந்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
இன்று இந்தமேடையில் என் மகனைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.அவனை நேரடியாக தயாரிப்பாளராக உருவாக்கவில்லை.ஆரம்பத்திலிருந்து சினிமாவின் அடிமட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து,முதலில் என் சீரியல்களில் நடிக்க வைத்தேன்.அதன்பிறகுதான் தயாரிப்பாளராக வரவேண்டும் என்று சொல்லி வளர்த்தேன்.இன்று எந்த உதவியும் இல்லாமல் தனது முயற்சியால் இந்தஅளவுக்கு வளர்ந்திருக்கும் என்மகன் அஜய்கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
‘தடயம்’ சீரிஸை நான் வீட்டில் உட்கார்ந்து பார்க்கும்போது,அது ஒரு வெப்சீரிஸ் போலவே எனக்குத் தோன்றவில்லை.ஒரு திரைப்படம் போலவே உணர்ந்தேன்.அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தில்,முடிவுவரை பார்த்து முடித்த பிறகுதான் எழுந்தேன்.அந்த அளவுக்கு இயக்குநரின் கைவண்ணமும்,ஒளிப்பதிவாளரின் பணியும்,எடிட்டரின் வேலையும் மிகவும் சிறப்பாக இருந்தது.இந்த சீரிஸை திரைப்படத் தரத்தில் உருவாக்கிய முழுக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.
நான் சின்னத்திரைக்குப் புதிதானவன் அல்ல.1999 ஆம் ஆண்டிலேயே ‘மங்கை’ என்ற தொடர் மூலம் மதியநேர மெகா தொடரை தொடங்கியவர்களில் ஒருவன் என்ற பெருமை எனக்கு உள்ளது.சின்னத்திரைதான் என்னை வளர்த்தது.நான் சின்னத்திரையில் சம்பாதித்ததால்தான் பெரியதிரையில் ஏற்பட்ட கடன்களைக்கூட அடைக்க முடிந்தது.அந்த சின்னத்திரையையே நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டவனாக நினைக்கிறேன்.அதேபாதையில் என் மகனையும் அனுப்பியிருக்கிறேன்.அவருடைய பயணத்திலும் நீங்கள் அனைவரும் பங்கெடுத்து,அவருக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.நன்றி என்றார்.

நடிகர் பிரேம் பேசியதாவது…..

இந்த சீரிஸில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது.இது எனக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது.அந்த வாய்ப்பை அளித்த அஜய் சார்,நவீன் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.இந்த சீரிஸில் பணியாற்றும்போது அவர்கள் என்னை ஒரு கலைஞராக மட்டும் அல்லாமல்,தங்களுடைய சகோதரனைப் போலவே பார்த்துக்கொண்டார்கள்.அதற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன்.அதேபோல் என்னுடன் நடித்த அண்ணன் கனி,அண்ணன் ராஜா உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.இந்தக்குழு இனியும் பல நல்லபடைப்புகளை உருவாக்கும் என்று நம்புகிறேன்.நன்றி என்றார்.

நடிகர் சமுத்திரகனி பேசியதாவது….

ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும்.‘தடயம்’ அந்தநிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்து பல விசயங்களைச் சரிசெய்த மாதிரி உணர்வைத் தருகிறது.அதுதான் இந்தவெற்றியின் மகிழ்ச்சி.நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3000 எபிசோடுகள் இயக்கியிருக்கிறேன்.ஆனால் அந்தப்பயணத்தில் இவ்வளவு நேர்மையாக பாராட்டுகளைக் கேட்கும் வாய்ப்பு அரிது.இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
இந்தப்படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது.அவரும்,அஜய்,நவீன்,கேகே சார் உள்ளிட்ட பலர் இந்தவெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள்.அனைவரின் உழைப்பும் சேர்ந்துதான் இந்த வெற்றியைக் கொடுத்திருக்கிறது.ஒரு அப்பாவிடம் இருந்து பிள்ளைக்குக் கிடைக்கும் அங்கீகாரம் மிகப்பெரிய விசயம்.அந்த அங்கீகாரம் அஜய்க்கு இவ்வளவு சீக்கிரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
இந்தவெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.இந்த வெற்றி இங்கேயே நிற்காமல் இன்னும் பலதூரம் எங்களை அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன்.இன்னும் பல வெற்றிகளைச் சேர்த்து மீண்டும் மீண்டும் சந்தித்து இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வோம். நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts