தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் நடக்கும் சதிகள் – பரபரப்புத் தகவல்கள்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நடப்பாண்டு மே மாதம் நிறைவடைகிறது.இதனால் அச்சங்கத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் எனவும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் இப்போது துணைத்தலைவராக இருக்கும் ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையில் ஒரு அணியும்,தலைவராக இருக்கும் முரளி ராமசாமி தலைமையில் இன்னொரு அணியும் வலுவான மோதலில் இருக்கிறார்கள். சுயேச்சையாக தலைவர் பதவிக்கு மன்னனும், செயலாளர் பதவிக்கு கதிரேசனும் போட்டியிடுகிறார்கள்.
ஜி.எம்.தமிழ்க்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு ஆர்.கே.சுரேஷ் மற்றும் எஸ்.கமலக்கண்ணன், செயலாளர்கள் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் .கமீலா நாசர், பொருளாளர் பதவிக்கு என்.சுபாஷ் சந்திரபோஸ், இணைச்செயலாளர் பதவிக்கு சுஜாதா விஜயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இத்தேர்தல் பரப்புரையில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படும் சில தகவல்கள் இங்கே…
கடந்த தேர்தலில் ஓரணியில் நின்ற முரளி ராமசாமியும் தமிழ்க்குமரனும் இத்தேர்தலில் எதிரெதிராக நிற்கிறார்கள்.இதனால், கடந்தமுறை நான் தலைவராகச் செயல்பட முடியாமல் போனதற்கு இவர்களே காரணம் என்று செயலாளர் துணைத்தலைவர் ஆகியோரைச் சொல்கிறாராம் முரளி ராமசாமி.அதனால் இம்முறை அவர்களை விலக்கி வைத்துவிட்டு நான் புதிய அணியோடு தேர்தலைச் சந்திக்கிறேன் எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று வாக்கு கேட்கிறாராம்.
முரளி ராமசாமி தலைவராக இருக்கிறார் அவர் எல்லாம் பார்த்துக் கொள்வார் என்று நம்பியிருந்தேன் ஆனால் அவர் செயல்படவே இல்லை என்பதால் அவரை விட்டுவிட்டு அணி அமைத்துப் போட்டியிடுகிறோம் என்று தமிழ்க்குமரன் சொல்லி வருகிறாராம்.அதோடு, நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் இருந்தபோது செயல்பட்டதைப் போல் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நான் செய்வேன் என்று வாக்குறுதி கொடுக்கிறாராம்.
அதேநேரம் இத்தேர்தலில் பல சதிவேலைகள் அரங்கேறுகின்றன என்றும் சொல்லப்படுகிறது.
ஓரணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஒருவர், சுயேச்சையாகப் போட்டியிடும் ஒருவரோடு சேர்ந்து கொண்டு தன் அணியில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர் மற்றும் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுபவர் ஆகிய இருவரையும் தோற்கடிக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அதேநேரம் அவர்களிடம் தேர்தல் செலவுக்கென பெரும் தொகை வேறு பெற்றுக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல், ஓரணியில் துணைத்தலைவர் போட்டியிடும் ஒருவர் ஊர் ஊராகச் சென்று, எங்கள் அணிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்காமல் எனக்கு மட்டும் ஓட்டுப்போடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.தம் அணியில் இருப்பவர்கள் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதே அவருடைய விருப்பம் என்கிறார்கள்.
ஓரணியில் சேர்ந்து போட்டியிடும் மூத்த தயாரிப்பாளர் ஒருவர், இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் வாக்காளராக மட்டும் இருந்திருந்தால் பணமாக சுமார் ஒரு இலட்சம் அதுமட்டுமின்றி பல பரிசுப்பொருட்கள் கிடைத்திருக்கும் என்கிறார்.அந்த அளவுக்கு இரண்டு அணிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் சுயேச்சையாகப் போட்டியிடுபவர்களும் பணமும் பரிசுப் பொருட்களும் வழங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.ஒரு பெண் வேட்பாளர் மட்டும் பணம் எதுவும் தரமாட்டேன் என் உழைப்பே எனக்கான மதிப்பு என தெம்பாக போட்டியில் இருக்கிறாராம்.
எல்லா முக்கிய போட்டியாளர்களும் ஏதாவது ஒரு பெயரில் மதுவிருந்து நடத்திக் கொண்டேயிருக்கிறார்கள் என்றும் மது ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமுமின்றி செயல்படும் போட்டியாளர்களால் இந்தத் தேர்தல் பெரும் கேலிக்கூத்தாகிக் கொண்டிருக்கிறதென வருந்துகிறார்கள் சிலர்.










