தப்பு செய்யும் நடிகரை பாதுகாக்கும் தெலுங்கு நடிகர் சங்கம் – தவிக்கும் தமிழ்ப்படக்குழு
எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய குரு சரவணன், பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் அவரையே நாயகனாக வைத்து ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கியவர்,அதற்கடுத்து ஹன்சிகா நடித்த கார்டியன் படத்தை இயக்கினார்.
அவற்றிற்கடுத்து,தற்போது தனது மூன்றாவது படைப்பாக இந்த புதியபடத்தை அவர் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பில்,
இரட்டை நாயகர்கள் கொண்ட இந்தப் படத்தில்,விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நண்பன் கதாப்பாத்திரங்களில் நடித்தவரும்,’கன்ஜூரிங் கண்ணப்பன்’,’சட்டம் என் கையில்’ போன்ற படங்களின் மூலம் நாயகனாக தன்னை நிலைநாட்டியவருமான சதீஷ் குமார்,ஆக்ஷன் கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.வித்தியாசமான கதை அமைப்பைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் இந்தப் படத்திலும் அதை நிரூபித்துள்ளார்.
இந்தப் படத்தின் மூலம் மற்றொரு கதாநாயகனாக, பிரபல தெலுங்கு நடிகர் சாய்குமாரின் மகனும், தெலுங்குத் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆக்ஷன் கதாநாயகனாக அறியப்பட்டு, 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவருமான ஆதி சாய்குமார், தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக அறிமுகமாகிறார்.
‘பீஸ்ட்’, ‘லியோ’ போன்ற படங்களின் மூலம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தித் திரையுலகங்களிலும் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, படத்தின் வித்தியாசமான கதைக்களத்தால் கவரப்பட்டு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்த பல படங்களுக்கு இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்க, தமிழின் முன்னணி படங்களுக்கு கலை இயக்கம் செய்த துரைராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் ஜி.சுரேஷ் தயாரிப்பில் குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்போடு 2025 டிசம்பர் 15 ஆம் தேதியன்று சென்னையில் பெரிய அளவில் தொடக்கவிழாவையும் நடத்தினார்கள்.அப்போது, ஆதி சாய்குமார்,சதீஷ் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.2026 சனவரி முதல்தேதி இப்படத்தின் முதல்பார்வை மற்றும் பெயர் வெளியிடப்பட்டது.படத்தின் பெயர் பத்துநாள் ராஜா.
எல்லாம் நல்லபடியாக நடந்துகொண்டிருந்தது.
ஆனால், படப்பிடிப்பு தொடங்கவில்லை.
ஏனென்று விசாரித்தால் ஓர் அதிர்ச்சித் தகவல் கிடைக்கிறது. அது என்ன?
கதை கேட்டு,சம்பளம் பேசி எல்லாவற்றையும் ஒத்துக் கொண்ட நடிகர் ஆதி சாய்குமார்,இம்மாதத் தொடக்கத்தில் படப்பிடிப்புக்கு அழைத்தபோது வரவில்லையாம்.அதனால் திடுக்கிட்ட படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னொரு தேதியில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறது. அப்போதும் அவர் வரவில்லையாம். மீண்டும் அவரிடம் பேசிவிட்டு சனவரி 19 ஆம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.
அந்தத் தேதியில் கண்டிப்பாக வந்துவிடுவதாக ஒப்புக்கொண்டாராம் ஆதி சாய்குமார்.ஆனால் சொன்னபடி வரவில்லையாம்.
இதனால் அதிர்ந்து போன படக்குழு, தெலுங்கு நடிகர் சங்கத்தை நாடியிருக்கிறது.அவர்கள் விசயத்தைக் கேட்டுவிட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்காமல், நீங்கள் உங்கள் நடிகர் சங்கம் மூலம் பேசுங்கள் என்று சொல்லி நழுவிவிட்டார்களாம்.
இதனால் திகைத்துப் போன படக்குழு, இங்குள்ள நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்களாம்.
தங்கள் நடிகரின் பக்கம் தப்பு இருக்கிறதென்று தெரிந்தும்,நீங்கள் போய் நடியுங்கள் என்று கண்டிப்பாகச் சொல்லாமல் நழுவிய தெலுங்கு நடிகர்சங்கத்தின் நடவடிக்கையால் தவித்துப் போயிருக்கிறது படக்குழு.











