சினிமா செய்திகள்

இசைமேதை ஏ.ஆர்.ரகுமானை விமர்சிப்பதா? – செல்வப்பெருந்தகை கண்டனம்

அண்மையில் பிபிசி தமிழ் நிறுவனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டியில்…

பாலிவுட்டில் (இந்தித் திரையுலகம்) தமிழ்ச் சமூகத்திற்கு எதிராக இன்றும் நிறைய பாகுபாடு நிலவுவதை நான் பார்க்கிறேன். 90களில் அது எப்படி இருந்தது? நீங்கள் எப்போதாவது அதை எதிர்கொண்டீர்களா? என்கிற கேள்விக்கு,

நான் எதிர்கொள்ளாமல் இருந்திருக்கலாம். இந்த விசயங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வரவில்லை. ஒருவேளை கடவுள் இவற்றையெல்லாம் மறைத்திருக்கலாம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இருக்கலாம். ஒருவேளை அதிகார மாற்றம் நடந்திருக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது இருக்கிறது.

இது ஒருவேளை ஒரு சமூகரீதியான விசயமாகவும் இருந்திருக்கலாம். என் கண் முன்பாக நடக்கவில்லை. ஆனால் இது நடந்தது. ‘அவர்கள் உங்களை ஒப்பந்தம் செய்தார்கள், ஆனால் மற்றொரு இசை நிறுவனம் சென்று அந்தப் படத்திற்கு நிதியுதவி செய்து, தங்கள் ஐந்து இசையமைப்பாளர்களைப் பயன்படுத்திக் கொண்டது’ என்பன போன்ற கிசுகிசுக்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைக் கேட்கும்போது, ‘ஓ நல்லது, எனக்கு ஓய்வு கிடைத்தது. நான் என் குடும்பத்துடன் நிம்மதியாக நேரத்தைச் செலவழிப்பேன்’ என்று நினைத்துக்கொள்வேன்.

என்று விடையளித்தார்.

அதோடு,’சாவா’ படத்தின் (சாவா (  Lion cub ) என்பது 2025 ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழி காவிய வரலாற்றுத் திரைப்படமாகும், இது மராட்டியப் பேரரசின் இரண்டாவது ஆட்சியாளரான சாம்பாஜியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது) இசையைப் பற்றி நீங்கள் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறியுள்ளீர்கள். அது உண்மையிலேயே ஒரு நல்ல இசை. இருப்பினும் அதுவொரு பிளவுபடுத்தும் படம் தானே? என்கிற கேள்விக்கு

ஆமாம் என்று பதிலளித்தார்.

இவை கடும் விமர்சனங்களுக்கு ஆளானது.விமர்சனங்கள் எல்லை மீறியதைத் தொடர்ந்து, ஏ.ஆர்.ரகுமான் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்….

அன்புள்ள நண்பர்களே, இசை என்பது கலாசாரத்துடன் இணைவதற்கும், அதைக் கொண்டாடுவதற்கும், மரியாதை செலுத்துவதற்கும் நான் பயன்படுத்தி வரும் ஒரு கருவி. இந்தியா எப்போதுமே எனது வீடு, எனது ஆசிரியர் மற்றும் எனது உந்துகோலாக இருந்து வருகிறது.

சில நேரங்களில் ஒருவரின் நல்ல நோக்கங்கள் கூட தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்பதை நான் இப்போது உணர்கிறேன். இசையின் மூலம் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே எனது வாழ்நாள் நோக்கம். என் பேச்சின் மூலம் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. எனது உண்மையான எண்ணம் அனைவருக்கும் புரியும் என்று நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவர் மீதான விமர்சனங்கள் குறையவில்லை.

இந்நிலையில்,தமிழ்நாடு காங்கிரசுக் கட்சித் தலைவர் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான விமர்சனங்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது….

உலகளவில் இந்திய இசைக்கு பெருமை சேர்த்தவர், ஆஸ்கர் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளைப் பெற்றவர், இசை அமைப்பாளர் திரு.ஏ.ஆர்.ரகுமான் அவர்கள்.அவருக்கு எதிராக சமீப காலமாக முன்வைக்கப்படும் தேவையற்ற, அடிப்படை அற்ற விமர்சனங்கள் மிகுந்த வருத்தத்தையும் கவலையையும் அளிக்கின்றது.

பல தசாப்தங்களாக இசையின் மூலம் மனிதநேயம், அமைதி, ஒற்றுமை ஆகிய மதிப்புகளை உலகம் முழுவதும் பரப்பிவரும் திரு.ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. கலைஞர்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.மேலும்,அவர் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று அவர் பதிலளித்துள்ளார். இந்நிலையில் அவர் மீது தனிப்பட்ட முறையிலும் கருத்துத் தாக்குதல் நடத்துவதும்,அவமதிக்கும் வகையிலும் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்தும் ஜனநாயகத்திற்கும், கலாச்சார மரபுகளுக்கும் முற்றிலும் முரணானவை.

கலைஞர்களை அவர்களின் படைப்புகளின் அடிப்படையில் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் அவர்களின் சாதனைகளையும், சமூகத்திற்கு அளித்த பங்களிப்புகளையும் புறக்கணித்து,இழிவுபடுத்தும் நோக்குடன் செய்யப்படும் விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கவை.

எனவே, இசைமேதை திரு.ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் இத்தகைய கடுமையான விமர்சனங்களை தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.கலை,கலாச்சாரம்,மனிதநேயம் ஆகியவற்றை மதிக்கும் அனைவரும் இத்தகைய செயல்களை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts